
சீறிப்பாய்ந்து வந்த மாட்டிடம் இருந்து, தனது இரண்டு வயது தம்பியை சமயோசிதமாக சிறுமி ஒருவர் மீட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹன்னர் தாலுக்காவைச் சேர்ந்த நவிலக்கோன் கிராமத்தில் சிறுமி ஒருத்தி, தனது வீட்டு அருகே தனது 2 வயது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ அதிவேமாக மாடு ஒன்று வந்து கொண்டிருந்தது. சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்த இந்த மாடு, அவர்களை முட்டுவதற்காக சீறிப்பாய்ந்தது.
மாடு சீறி வருவதை அறிந்த அந்த சிறுமி, தனது தம்பியை தூக்கிக் கொண்டு தப்பிக்க முயன்றாள். ஆனாலும், அந்த மாடு, அந்த சிறுவனை முட்டுவதிலேயே குறியாக இருந்தது. ஆனாலும் அந்த சிறுமி, சமயோசிதமாக மாட்டிடம் இருந்து தனது தம்பியைக் காப்பாற்றி தனது வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.
சிறுமியின் சமயோசித புத்தியினாலும், துணிச்சலாக செயல்பட்டதாலும், அவரது தம்பிக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. சிறுவனை, தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்ற பிறகுதான் வீட்டில் உள்ளவர்களுக்கு நடந்த சம்பவம் பற்றி தெரிய வந்தது.
பின்னர் அவர்கள், வீட்டின் வெளியே சுற்றித் திரிந்த மாட்டை கம்பு கொண்டு விரட்டி அடித்தனர். இந்த சம்பவம், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.