உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: திருமணத்துக்கு தயாராகிவிட்ட திருநங்கை அதிகாரி!

By vinoth kumarFirst Published Sep 11, 2018, 2:41 PM IST
Highlights

அரசியலமைப்புச் சட்டத்தில் 377 பிரிவான தன்பாலின உறவை குற்றம் என்பதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை அதிகாரி தனது ஆண் நண்பரைத் திருமணம் செய்ய உள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் 377 பிரிவான தன்பாலின உறவை குற்றம் என்பதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை அதிகாரி தனது ஆண் நண்பரைத் திருமணம் செய்ய உள்ளார். ஓடிசா மாநிலத்தில், வணிக வரித்துறையில் பணியாற்றும் துணை ஆணையர் ஐஸ்வர்யா ரிதுபர்னா பிரதான்(வயது34) என்ற திருநங்கைதான் தனது நண்பரைத் திருமணம் செய்ய உள்ளார். 

இது குறித்து ஐஸ்வர்யா ரிதுபர்னா பிரதான் கூறியதாவது: கந்தமால் மாவட்டம், கானா பார்கி கிராமத்தில் நான் பிறந்தேன். என்னுடைய பெயர் ரதிகந்தா பிரதான் என்னுடைய பெயராக இருந்தது. சிறுவயதில் இருந்ேத என்னுடைய சகோதரியின் நகைகள், உடைகள் அணிவது எனக்கு விருப்பமாக இருந்தது. என்னுடைய அம்மா இல்லாதநேரத்தில் அவரின் நகைகளை எடுத்துப் போட்டு அழகுபார்ப்பேன். ஆனால் நான் ஆணாக நடந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய தந்தை அடிக்கடி கூறி அடித்தார். 

என்னுடைய தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர். ஆனால் படிக்கும் காலத்தில் என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்து பலர் கிண்டல் செய்தனர், பள்ளியில் ஆசியர்களே என்னை அவமானப்படுத்தினார்கள். கல்லூரி காலத்திலும், பல்கலையில் நான் விடுதியில் தங்கிபடித்தபோது பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன். அதன்பின் 2010-ம் ஆண்டு நான் ஓடிசா மாநில அரசில் வணிகவரித்துறை பிரிவில் எனக்கு வேலை கிடைத்தது. வேலை கிடைத்தபின் என்னுடைய அடையாளத்தை நான் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், நான் ஆண் என்ற அடையாளத்துடன் வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அறிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து நான் 2015-ம் ஆண்டு உடல்ரீதியான அறுவைசிகிச்சை செய்து நான் பெண்ணாக மாறினேன். எனது பெயரை ஐஸ்வர்யா ரிதுபர்னா பிரதான் என்று மாற்றிக்கொண்டேன். 

என்னுடைய ஆண் நண்பர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஆனால் என்னைக் காட்டிலும் வயது குறைவாக இருந்ததால், நான் ஏற்கவில்லை. இது உடல்ரீதியான ஈர்ப்பு என்று அவருக்கு அறிவுரை கூறினேன் ஆனால் அவர் ஏற்கவில்லை. என்னை விரும்புவதாகத் தெரிவித்தார். அவரின் உண்மையான அன்பை புரி்ந்துகொண்டு நானும் விரும்பினேன். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவரும், நானும் காதலித்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்ய என்னை அணுகினார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது ஒரேபாலின உறவு தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், என் காதலரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறேன்.

நான் ஒரு திருநங்கை என்று என் காதலரின் குடும்பத்தாருக்கு தெரியாது. நான் அவரிடம் பலமுறை கூறி குடும்பத்தாரிடம் கூறுங்கள் எனத் தெரிவித்தேன். ஆனால், அவர் தெரிவிக்கவில்லை. இனிமேல் அவரின் பெற்றோர் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனக்கு கவலையில்லை. நான்ஒரு பெண், என்னால் சுயமாக வாழமுடியும். என்னுடைய காதலர் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டார். அதுவே எனக்குப் போதும்.

எங்கள் திருமணம் முடிந்தபின் நாங்கள் இருவரும், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளோம். என் மகளை வளர்த்து நான் அவளை உலக அழகிப்போட்டியில் பங்கேற்க வைக்க விருப்பம். அவள் தன்னுடைய தாய் ஒரு திருநங்கை என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அந்த தருமணம்தான் எனக்கு மிகுந்த பெருமையான நேரமாகும் எனத் தெரிவித்தார்.

click me!