அண்மையில் விமானப் பயணிகளின் அத்துமீறிய செயல்களின் எதிரொலியாக ஏர் இந்தியா நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அண்மையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். இச்சம்பவம் கிளப்பிய சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலும் ஆண் பயணி ஒருவர் காலியாக இருந்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது.
இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தனது மது விநியோகக் கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. இந்தக் கொள்கை மாற்றங்கள் ஜனவரி 19 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, விமானப் பயணியாளர்களுக்கு அளித்துள்ள வழிகாட்டுதல்களில், பயணிகளுக்கு அளவுக்கு அதிகமாக மது வழங்கக் கூடாது என்றும் அப்படி அளவுக்கு அதிகமாக மது அருந்த விரும்பும் பயணிக்கு மது வழங்க மறுக்கலாம் என்றும் கூறியுள்ளது.
விமானத்தில் பயணிகள் சொந்தமாக மதுபானங்களை எடுத்து வந்து குடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மது அருந்திய பயணிகளிடம் பேசும்போது பணிவாக நடந்துகொள்ள வேண்டும், ‘குடிகாரர்’ என்ற சொல்லைக் குறிப்பிடாமல் பேசவேண்டும் என்று பல்வேறு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.
மது அருந்தும் பயணிகளிடம் பேசிப் புரிய வைப்பது மட்டுமின்றி அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதும் அவசியம் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது.