பீகாரில் பள்ள மாணவியிடம் ஆணுறை குறித்து அநாகரீகமாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பும்ரா மீது விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்(என்சிபிசிஆர்) உத்தரவிட்டுள்ளது
பீகாரில் பள்ள மாணவியிடம் ஆணுறை குறித்து அநாகரீகமாக பேசிய பெண் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பும்ரா மீது விசாரணை நடத்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்(என்சிபிசிஆர்) உத்தரவிட்டுள்ளது
அதுமட்டுமல்லாமல் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், அந்த ஐஏஎஸ் அதிகாரி கவுர் பும்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தேசிய மகளிர் ஆணையம் ஐஏஎஸ் அதிகாரி பும்ராவுக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்டுள்ள நிலையில் குழந்தைகள் உரிமை ஆணையமும் விசாரணை நடத்த உள்ளது.
மாநில குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு வாரியத்தின் கூடுதல் இயக்குநராக ஹர்ஜோத் கவுர் பும்ரா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியைச் சந்தித்ததும் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறிய சிறுமி: வைரல் வீடியோ
பாட்னா நகரில் அரசு, யுனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் “ பீகார் மகள்கள், வளர்ச்சி பீகார்” என்ற தலைப்பில் பயிற்சிப்பட்டறை செவ்வாய்கிழமை நடந்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராக இருக்கும் ஹர்ஜோத் கவுர் பாம்ரா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவி மேடையில் ஏறி, ஹர்ஜோத் கவுரிடம் “ அரசு சார்பில் தற்போது எங்களுக்கு சீருடை, உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. ரூ.20 முதல் 30ரூபாய்க்குள் சானடரி நாப்கின்கள் வழங்கப்படுமா” என்று கேட்டார்.
அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் “ நாளை நீங்கள் இலவசமாக அரசிடம் ஜீன்ஸ் பேண்ட் கேட்பீர்கள். அதன்பின் ஏன் எங்களுக்கு அழகான ஷீ வழங்கக்கூடாது என்று கேட்பீர்கள். இறுதியில் அரசு உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு முறை, ஆணுறைகூட வழங்கும் என எதிர்பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்தார்
'தமிழகத்தில் சமஸ்கிருதம் கற்பதை ஊக்கப்படுத்துவதில்லை': நிர்மலா சீதாராமன் வேதனை
ஹர்ஜோத் கவுரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் கண்டனத்துக்குள்ளானது. மாணவியிடம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இவ்வாறு அநாகரீகமாக பேசலாமா என்று கண்டித்தனர்.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ள தேசிய மகளிர் ஆணையம், 7 நாட்களுக்குள் கவுர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ நாளேடுகள் மூலம் அறிந்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் உள்ள பெண்களின் நலனுக்காக அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும். ஐஏஎஸ் அதிகாரியின் நடவடிக்கை அரசின் செயல்பாட்டுக்கு எதிராக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவி்த்தார்
இதற்கிடையே தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் ஐஏஎஸ் அதிகாரி கவுர் பும்ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என பீகார் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், பீகார் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன் சட்டம் 2015,பிரிவு 75 விதியை ஐஏஎஸ் அதிகாரி கவுர் பும்ரா மீறியுள்ளார். அவர் மீது விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.