ஆதியோகி திவ்ய தரிசனத்துக்கு சர்வதேச தொழில்நுட்ப விருது

By Asianet TamilFirst Published May 10, 2020, 2:13 PM IST
Highlights

ஈஷாவில் நடத்தப்படும் ஆதியோகி திவ்ய தரிசனம் என்ற 3-டி ஒளி, ஒலி காட்சியை வடிவமைத்தற்காக ஆக்சிஸ் த்ரீ டி ஸ்டுடியோவுக்கு சர்வதேச தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டுள்ளது. 
 

மோன்டோ டி.ஆர். என்ற சர்வதேச தொழில்நுட்ப இதழ் ‘House of Worship' என்ற பிரிவில் இவ்விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. இப்பிரிவில், ஈஷாவின் ஆதியோகி திவ்ய தரிசனம் மட்டுமின்றி இங்கிலாந்தில் இருந்து 2 தேவாலயங்கள், பிரான்ஸில் இருந்து ஒரு தேவாலயம் உட்பட ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான பங்கேற்பாளர்கள் தேர்வு பட்டியலில் இடம்பெற்று இருந்தனர். தேர்வின் முடிவில் இணையற்ற தொழில்நுட்ப சிறப்பால் ஆதியோகி திவ்ய தரிசனம் விருதினை கைப்பற்றியது. 

இதுதொடர்பாக, இதை வடிவமைத்த ஆக்சிஸ் த்ரீ டி ஸ்டுடியோவின் நிறுவனர் திரு. அவிஜித் சமாஜ்தார் கூறுகையில், “நாங்கள் வடிவமைத்த ஆதியோகி திவ்ய தரிசனத்துக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரத்தால் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த வாய்ப்பை உருவாக்கி தந்ததற்காக சத்குரு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன். 

திவ்ய் தரிசனத்துக்கு கதை எழுதுவதில் தொடங்கி, இசை அமைப்பது, பல்வேறு வண்ணங்களை கொண்டு காட்சிப்படுத்துவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் சத்குரு எங்களுடன் இணைந்து பங்கெடுத்தார். இதை வடிவமைப்பதில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் அற்புதமான இசையும் மிகுந்த உறுதுணையாக இருந்தது.

8,000 சதுர அடி பரப்பு கொண்ட முழுவதும் கருப்பு நிறத்திலான ஆதியோகி திருவுருவத்தில் 3-டி ஒளி, ஒலி காட்சியை வடிவமைத்தது என்பது சாதாரண விஷயமல்ல. மிகவும் சவாலான ஒன்று. ஏனென்றால், கருப்பு நிறத்தில் இருக்கும் பொருள் அனைத்து ஒளிகளையும் உள்வாங்கி கொள்ளும் தன்மைகொண்டது. ஆகவே, இதற்கென பிரத்யேகமாக நவீன லேசர் கருவிகளையும் கொண்டு இதை சாத்தியமாக்கி காட்டியுள்ளோம். உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற ஒரு தொழில்நுட்ப முறையை உருவாக்கி அதில் வெற்றி கண்டுள்ளோம். அதற்கு இப்போது சர்வதேச விருதும் கிடைத்து இருக்கிறது” என்றார். 

ஆதியோகி திவ்ய தரிசன காட்சியை மாண்புமிகு பாரத குடியரசு தலைவர் 2019-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழாவின் போது தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்த 3-டி ஒளி, ஒலி காட்சி வாரந்தோறும், சனி, ஞாயிறு கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி போன்ற விஷேச நாட்களில் நடத்தப்படுகிறது. தற்போது கொரோனா பிரச்சினையால் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

click me!