
கருப்புப் பணம், லஞ்ச ஊழல் ஆகியவற்றை அடியோடு ஒழிப்பதற்காகவே, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதாகவும், இந்த 2 தீமைகளையும் முற்றிலுமாக ஒழிக்கும் வரை இதுபோன்ற மற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. கருப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கருப்புப் பண வேட்டையில், இது முதற்கட்ட நடவடிக்கைதான் என்றும், அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கொண்டு வந்த தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்கியது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தனது Apps மூலம் தெரிவிக்கலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, வேளாண்துறையில் பல்வேறு புதிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.