கொரோனாவை ஓடஓட விரட்டி சாதனை... குணமான கேரள மாணவி..!

By Thiraviaraj RMFirst Published Feb 20, 2020, 10:55 AM IST
Highlights

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திருச்சூர் மாணவி குணமாகியுள்ளது நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவரை வீட்டுக்கு அனுப்புவது குறித்து இன்று டாக்டர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திருச்சூர் மாணவி குணமாகியுள்ளது நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவரை வீட்டுக்கு அனுப்புவது குறித்து இன்று டாக்டர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

கேரளா மாநிலத்தில் இருந்து சீனாவில் மருத்துவம் படிக்கச் சென்ற 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் திருச்சூரைச் சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த மாதம் 30-ந்தேதி தெரிய வந்தது. இவர் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நபர்.

இவருக்கு திருச்சூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது போல கொரோனா பாதிப்புக்கு ஆளான மற்ற 2 மாணவர்களும் ஆலப்புழா, காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்றவர்களில் ஆலப்புழா மாணவர் முதலில் குணமானார். அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து காசர்கோடு மாணவரின் ரத்த மாதிரி சோதனையிலும் அவருக்கு நோய் தாக்கம் இல்லை என்பது தெரிய வந்தது. எனவே அவரும் 2 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

திருச்சூர் மாணவியின் ரத்த மாதிரி சோதனை அறிக்கை மட்டும் வர தாமதமானது. அவரது இறுதி சோதனை அறிக்கை நேற்று வந்தது. இதில் திருச்சூர் மாணவியும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டது தெரிய வந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் நபர் என்று கூறப்பட்ட திருச்சூர் மாணவியும் இப்போது குணமடைந்து விட்டது தெரிய வந்ததால் அவரை வீட்டுக்கு அனுப்புவது குறித்து இன்று டாக்டர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆலோசனைக்கு பிறகு அவர் உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் இப்போதும் 2246 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2233 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 13 பேர் மருத்துவமனைகளில் உள்ளதாக கேரள சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!