2018-ம் ஆண்டு சாலை விபத்தில் 1.5லட்சம் பேர் பலி: அதிகமான மரணம் எதில் தெரியுமா?, மணிக்கு எத்தனைபேர் இறக்கிறார்கள்? மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!!

By Selvanayagam PFirst Published Nov 20, 2019, 8:33 PM IST
Highlights

2018-ம் ஆண்டில் நாட்டில் நடந்த சாலை விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் இறந்துள்ளார்கள் என்றும் கடந்த 2017-ம் ஆண்டைக் காட்டிலும் 2018-ம் ஆண்டி்ல சாலை விபத்துக்கள் எண்ணிக்கை 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துக்களோடு ஒப்பிடுகையில் கடந்த 2018-ம் ஆண்டு சாலை விபத்து 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது, உயிரிழப்புகள் 2.37 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சம் 2018-ம் ஆண்டில் நடந்த சாலைவிபத்துக்குள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2018-ம் ஆண்டில் நாடுமுழுவதும் நாள்தோறும் சராசரியாக 1,280 விபத்துக்கள் நடந்துள்ளன, அதில் 415 பேர் பலியாகியுள்ளனர். அதாவது ஒரு  மணிநேரத்துக்கு 53 சாலை விபத்துக்களும், அதில் 17 பேரும் உயிரிழந்துள்ளனர். 2018-ம் ஆண்டில் அதிகமான உயிரிழப்புகளுக்கு 8-வது காரணமாக சாலைவிபத்துக்களில் சிக்கி காயமடைந்ததால் இறந்ததுதான் எனத் தெரியவந்துள்ளது.

ஜெனிவாவை அடிப்படையாகக் கொண்ட உலக சாலை கூட்டமைப்பு உலக சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரத்தில் உலக அளவில் 199 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், சாலை பயன்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இந்தியா இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து சீனாவில் 63 ஆயிரம் பேரும் , அமெரிக்காவில் 37 ஆயிரம் பேரும் சாலை விபத்துகளில் இறந்துள்ளார்கள்.சாலை விபத்துக்களில் இறந்தவர்களில் பெரும்பாலும் 35 வயது முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகமாகும். சாலை விபத்து உயிரிழப்புகளில் சிறுகுழந்தைகள், மைனர் வயதில் இருப்பவர்கள் மரணம் என்பது 6.6 சதவீதமாக இருக்கிறது.

சாலை விபத்துக்களில் அதிகமானோர் இறப்பதற்கு அதிவேகமாக வாகனத்தை இயக்குவதுதான் முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. 64.4 சதவீத உயிரிழப்புகள் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதால் நடந்த விபத்துக்கள் மூலம் நடந்துள்ளன. மேலும் சாலையில் தவறான திசையில் வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துக்களில் மூலம் 5.8 சதவீதம் உயிரிழப்புகள் நடந்துள்ளன
.

உயிரிழப்புகளில் 28 சதவீதம் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்த இயக்கியதால் விபத்துகளில் சிக்கி இறந்துள்ளார்கள். அதாவது,43 ஆயிரத்து 614 பேர் தலைக்கவசம் அணியாமல் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.கார்களில் சீட் பெல்ட் அணியாமல் விபத்துக்களில் சிக்கி இறந்தவர்கள் 16.14 சதவீதமாகும். 

அதாவது24 ஆயிரத்து 435 பேர் சீட் பெல்ட் அணியாமல் உயிரிழந்துள்ளார்கள். குடிபோதையில் வாகனத்தை இயக்கியது 2.8 சதவீதம் பேர் உயிரிழப்புகள் நடந்துள்ளன. செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துக்கள் மூலம் இறந்தவர்கள் 2.4 சதவீதம் பேர் இறந்துள்ளார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சாலை விபத்துக்களில் முதலிடம் பெறுகிறது. ஒட்டுமொத்த சாலை விபத்துகளில் 13.7 சதவீதம் தமிழகத்தில் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 11 சதவீதம், உத்தப்பிரதேச மாநிலத்தில் 9.1 சதவீதம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. சாலை விபத்துகளில் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த வகையில் உ.பி. மாநிலம் முதலிடம் வகிக்கிறது. 

இங்கு 22 ஆயிரத்து 256 பேர் கடந்த ஆண்டு பலியாகியுள்ளார்கள் அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 13 ஆயிரத்து 261 பேரும், 3-வது இடத்தில் தமிழகத்தில் 12 ஆயிரத்து 216 பேரும் பலியாகியுள்ளார்கள்.


இதுகுறித்து “சேவ்லைப்” அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் திவாரி கூறுகையில், “ 2018-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்கள் குறித்த அரசின் அறிக்கையில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதைக்காட்டுகிறது. ஆனால், மத்தியஅரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை பல மாநிலங்கள் எதிர்க்கின்றன, அபராதத்தைக் குறைத்துள்ளன. 

இவ்வாறு செய்தால் விபத்துக்கள் எவ்வாறு குறையும். இந்த அறிக்கைக்குப் பின், மாநிலங்கள் உடனடியாக புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை 2019 தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின் கீழ் அபராதத் தொகையை உ.பி., குஜராத், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் கடுமையாகக் குறைத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!