
பத்தில் எட்டு இந்தியர்கள் அதாவது 80 சதவீதம் பேர், பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமான பார்வையைக் கொண்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் செல்வாக்கு உலகளவில் வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி மீதான சாதகமான பார்வையை கொண்டுள்ள 80 சதவீதம் பேரில் 55 சதவீதம் பேர் மிகவும் சாதகமாக கருத்து தெரிவித்துள்ளதாகவும், 2024 பொதுத்தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியே ஆட்சியமைக்க அவர்கள் விரும்புவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 25 முதல் மே மாதம் 11ஆம் தேதி வரை 2,611 இந்தியர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்று பியூ தெரிவித்துள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டையொட்டி இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே பிரதமர் மோடி மீதான எதிர்மறையான பார்வையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆளும் கட்சியை ஆதரிப்பவர்கள், இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்” என பியூ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்தியா வலுவடைகிறது என்று பெண்களை விட ஆண்களே அதிகம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளில் நாட்டின் செல்வாக்கு வலுவடைந்து வருவதாக பத்தில் ஏழு இந்தியர்கள் தெரிவித்தனர் எனவும், ஐந்தில் ஒரு பகுதியினர் மோடி தலைமையில் இந்தியா பலவீனமடைந்து வருவதாக நினைக்கிறார்கள் எனவும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக மாற்றியுள்ளது. அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வரும் இந்தியா, போரை கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்காமல் விலகியது. அதேசமயம், ஆயுதங்கள் மற்றும் மலிவான எரிசக்தியின் முக்கிய விநியோகஸ்தராக இருக்கும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடைகளில் இணையாமல் இந்தியா தவிர்த்தது.
ஆசியாவில் சீனாவின் பொருளாதார மற்றும் ராணுவ உறுதிப்பாட்டிற்கு எதிராக இந்தியா தன்னை ஒரு அரணாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. பாதுகாப்பான ஆயுத ஒப்பந்தங்கள் பெறும் நோக்கில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்றங்களை இந்தியா திறம்பட செய்கிறது.
மாதம் ரூ.2,000.. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான திட்டம்.. தொடங்கி வைக்கும் ராகுல் காந்தி
இந்தியர்கள் 65 சதவீதம் பேர் அமெரிக்காவை மிகவும் சாதகமாகப் பார்க்கிறார்கள், அதே நேரத்தில் பத்தில் நான்கு பேர் ரஷ்யாவின் உலகளாவிய செல்வாக்கு வலுப்பெற்றுள்ளதாக நம்புகிறார்கள் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு கணக்கெடுக்கப்பட்ட 24 நாடுகளில் இந்தியா மட்டுமே தனித்து நிற்கிறது, இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் ரஷ்யாவைப் பற்றி சாதகமான கருத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் அதிபர் விளாடிமிர் புடின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என பியூ அறிக்கை கூறுகிறது.
இந்தியா சீனா எல்லை பிரச்சினை கடந்த மூன்றாண்டுகளாக முற்றியுள்ளது. ராணுவம் மற்றும் தூதரக பேச்சுகள் என எந்த பேச்சுவார்த்தையிலும் பெரிதாக முன்னேற்றம் தென்படவில்லை. மேலும், சீன மொபைல் பயன்பாடுகளை தடை செய்து அந்நாட்டு முதலீடுகளை இந்தியா குறைத்தது.
இந்தியாவில், சீனா மீதான எதிர்மறையான பார்வைகள் 2019ஆம் ஆண்டில் இருந்து உச்சத்தை எட்டியுள்ளன என்று பியூ அறிக்கை கூறுகிறது. மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள் சீனாவைப் பற்றி சாதகமற்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலம் சீனா மீதான சாதகமற்ற கருத்துகளை கொண்ட பெரும்பான்மையானவர்கள் கொண்ட ஒரே நடுத்தர வருமான நாடாக இந்தியா விளங்குகிறது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதேசமயம், அமெரிக்காவையும் ரஷ்யாவையும் வலுவான உலகளாவிய செல்வாக்கு மிக்க நாடாக இந்தியர்கள் பார்க்கின்றனர்.
இந்தியர்களில் சுமார் 57 சதவீதம் பேர் ரஷ்யாவைப் பற்றி சாதகமான கருத்தைக் கொண்டுள்ளனர். ஐந்து ஐரோப்பிய நாடுகள் மீதான இந்தியர்களின் சாதகமான பார்வை தோராயமாக 10 சதவீதம் குறைந்துள்ளன. இந்தியர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்சின் உலகளாவிய செல்வாக்கு சமீபத்திய ஆண்டுகளில் ஒரே மாதிரியாக இருப்பதாக நம்புகிறார்கள் எனவும் பியூ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.