விலகி சென்ற தலைவர்கள் மீண்டும் கூடுகிறார்கள்... தலைநகரில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் புதிய திட்டம்..!

By Asianet TamilFirst Published Apr 5, 2019, 10:10 AM IST
Highlights

கூட்டணியே வேண்டாம் என்று ஒதுங்கிசென்ற காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றன. 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியாக 3 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் பாஜக வெற்றியைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி செய்தது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களுடன் ஆம் ஆத்மி தலைவர்கள் கூட்டணி பற்றி பேசினர். டெல்லியில் உள்ள  7  தொகுதிகளில், இரண்டு தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க ஆம் ஆத்மி முன்வந்தது.
ஆனால், மூன்று தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் அடம் பிடித்தது. இதற்கிடையே டெல்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்தது. ஆனால், டெல்லியில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்று தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வெளியாகிவருகின்றன. இதனால், வெறுத்துப்போன அரவிந்த் கெஜ்ரிவால், கூட்டணிக்கு வர மறுத்த காங்கிரஸை விமர்சிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் தற்போது திடீரென ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மீண்டும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் டெல்லி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பி.சி.சாக்கோவை சந்தித்து பேசினார். இருவரும், தொகுதி உடன்பாடு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் 6-வது கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளதால், வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.

 
இந்தப் பேச்சுவார்த்தைப் பிறகு, ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது பற்றி ராகுல் காந்தி இறுதி முடிவு எடுப்பார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸுடன் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக, “காங்கிரசை எதிர்த்துதான், ஆம் ஆத்மி கட்சியே தொடங்கப்பட்டது. தற்போது இருவரும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கூட்டணி அமைந்தாலும், இது பொருந்தா கூட்டணியாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

click me!