
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்தது. இந்த கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தியுள்ளன. அந்த வகையில் உலகளவில் அதிக தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. தடுப்பூசி மையங்களில் ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக ஆதார் கார்டு இல்லாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத நிலை உருவானது.
இப்பிரச்சினையைக் களைய மத்திய அரசின் யுஐடிஏஐ அமைப்பு கடந்தாண்டு மே மாதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என அறிவித்தது. ஆதார் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் அவருக்கு அரசின் அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை மறுக்கக்கூடாது என சுகாதார துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது. ஆனால் அரசு உத்தரவிட்டும் ஒருசில தடுப்பூசி மையங்கள், மக்களை தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயம் என சொல்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து சமூக ஆர்வலர் சித்தார்த்சங்கர் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், மக்களை ஆதார் கொண்டுவர சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயமில்லை. குறிப்பாக கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள கூட ஆதார் விவரங்கள் கோரப்படுவதில்லை. நாடு முழுவதும் 87 லட்சம் மக்களுக்கு ஆதார் உள்ளிட்ட எந்தவொரு அடையாள அட்டையும் இல்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மீண்டும் அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றும் என உறுதி கொடுத்திருப்பதால் வழக்கை முடித்துவைப்பதாக தெரிவித்தது.