
Student Paliyal Vankodumai At Kolkata Law College: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரியில் 24 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியின் காவலர் அறையில் மூன்று நபர்களால் அந்த மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர் 31 வயது மனோஜித் மிஸ்ரா, இப்போது அங்கு படிக்கும் மாணவர்கள் ஜைப் அகமது மற்றும் பிரமித் முகோபாத்யாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
காவலாளி அறைக்குள் பாலியல் வன்கொடுமை
பாதிக்கப்பட அந்த மாணவி கொடுத்த புகாரில், முக்கிய குற்றவாளியான 31 வயதான மனோஜித் மிஸ்ரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால் தான் ஏற்கனவே ஒருவரை விரும்பியதால் அதனை மறுத்துவிட்டதாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. புதன்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் அந்தப் பெண் சட்டக் கல்லூரிக்கு ஏதோ வேலைக்காகச் சென்றதாகவும், மிஸ்ரா அவரை அங்கேயே இருக்கச் சொன்னதாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் அவளை கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காவலாளி அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
வீடியோ எடுத்து மிரட்டல்
''நான் அழுது என்னை விடுவிக்கச் சொன்னேன். எனக்கு ஒரு காதலன் இருக்கிறான், என் காதலனை நான் நேசிக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை'' என்று அந்த மாணவி புகார் மனுவில் கூறியுள்ளார். மேலும் மனோஜித் மிஸ்ரா மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தபோது மற்ற இருவரும் அதை வீடியோ எடுத்து மிரட்டி சத்தம் போட்டால் இதை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்
கல்லூரியின் பிரதான வாயிலைப் பூட்டி விட்டு அவர்கள் இந்த கொடூர செயலை செய்துள்ளனர். அங்குள்ள காவலாளியும் அவர்களுக்கு உடைந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கஸ்பா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர், அதில் முக்கிய குற்றவாளியான மோனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவர் என்றும், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் சத்ரா பரிஷத்தின் (டிஎம்சிபி) தெற்கு கொல்கத்தா மாவட்டப் பிரிவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி
கைது செய்யப்பட்ட மற்ற இருவர் முதலாம் ஆண்டு மாணவரான 19 வயது ஜைப் அகமது மற்றும் தற்போதைய மாணவரான 20 வயது பிரமித் முகர்ஜி ஆவார். கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இப்போது கொல்கத்தாவில் மீண்டும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.