Omicron : ஒமைக்ரான் பாதித்தவர்களில் 80% பேருக்கு அறிகுறி இல்லை… அதிர்ச்சி கொடுத்த மன்சுக் மாண்டவியா!!

By Narendran SFirst Published Dec 21, 2021, 5:00 PM IST
Highlights

இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 200 பேரில் 80 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 200 பேரில் 80 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிராவில் தலா 54 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தெலங்கானா (20), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15) குஜராத் (14) பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுக்குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராஜ்யசபாவில் பேசிய போது, உலகில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவலை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று கூறினார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். தற்போது ஒரு மாதத்துக்கு 31 கோடி கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அடுத்த இரு மாதங்களில் இந்த எண்ணிக்கை 45 கோடியாக அதிகரிக்கும் என்று கூறினார். நாடு முழுவதும் இதுவரை 88 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 58 சதவீதம் பேருக்கு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம். இந்தியாவில் இதுவரை 200 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 80 சதவிகிதம் பேருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. 13 சதவிகிதம் பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளன. எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். போதுமான மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன. புதிதாக 48,000 வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

click me!