டெல்லி மாநகராட்சி தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவு

First Published Apr 24, 2017, 4:33 PM IST
Highlights
54 percent of the votes in the Delhi Municipal Corporation are recorded


 டெல்லி மாநகராட்சி தேர்தல் நேற்று 270 வார்டுகளில் அமைதியாக நடந்து முடிந்தது. இதில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின. 2 வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததால் அந்த வார்டுகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. நாட்டின் தலைநகர் என்பதால், டெல்லி மாநகராட்சியை கைப்பற்றுவதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே போட்டி ஏற்பட்டது. தேர்தலையொட்டி, இந்த 3 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி மொத்தம் 13 ஆயிரத்து 22 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 3,284 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்றும், 1,464 வாக்குச் சாவடிகள் அதிக பதற்றம் நிறைந்தவை என்றும் கருதப்பட்டது. இங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

அசம்பாவிதம் இல்லை

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 வரை நீடித்தது. அதற்கு பின்னரும் வாக்களிக்க வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மொத்தம் 54 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் எஸ்.கே. வஸ்தவா கூறும்போது, டெல்லியின் அனைத்து வார்டுகளிலும் தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டது.

ஒத்திவைப்பு

மாலை 4 மணி வரையில் 45 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவில் வாக்கு சதவீதம் 54-யை தாண்டும் என நம்புகிறோம் என்றார். 103 மற்றும் 63 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 2 பேர் மரணம் அடைந்ததால் அந்த வார்டுகளில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக விமர்சனம்

தேர்தலில் பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். பாஜக எம்பி மீனாட்சி லேகி கூறும்போது, டெல்லி மாநில அரசு தவறாக ஆட்சி செய்து வருகிறது. விளம்பரங்களுக்கு அதிக தொகையை அவர்கள் செலவு செய்கின்றனர். இதனை அவர்கள் டெங்கு மற்றும் சிக்குன் குன்யாவை ஒழிப்பதற்கு பயன்படுத்தலாம். தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றார்.

காங். – ஆம் ஆத்மி

டெல்லி முன்னாள் முதல் அமைச்சரான காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீக்சித் கூறும்போது, டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். இதனை மாநில ஆம் ஆத்மி அரசின் 2 ஆண்டுகால நடவடிக்கைக்கு கிடைக்கும் மதிப்பு என்று கருதக்கூடாது. 10 ஆண்டுகாலமாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.

தேர்தலுக்கு பின்னர் பேட்டியளித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்று தெரிவித்தனர்.

எந்திரங்கள் கோளாறு

தேர்தலின்போது ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. கிழக்கு ஆசாத் நகர், வடக்கு டெல்லியின் புராரி பகுதி, தென்மேற்கு டெல்லியின் காஷெரா உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் சரியாக செயல்படவில்லை. இதனால் சில நிமிடங்களுக்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எந்திரங்கள் சரி செய்யப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

கருத்துக் கணிப்பு முடிவுகள்

தேர்தலுக்கு பின்னர் 2 கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. இந்தியா டுடே – ஆக்சிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 202 – 220 இடங்களையும், ஆம் ஆத்மி 23-35 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 19-31 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி ஓட்டர் – ஏபிபி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 218 இடங்களிலும், ஆம் ஆத்மி 24 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

click me!