போபால் அருகே வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 10 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 52 கிலோ தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறையினர் சோதனைக்கு பயந்து மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மத்தியபிரதேச மாநிலம் தலைநகர் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாகவே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் நகைகள், முக்கிய ஆவணங்கள், கோடிக்கணக்கான பணம் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் தலைநகர் போபால் அருகே மண்டோரா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பல நாட்களாக கேட்பாரற்று டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் ஒன்று நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
undefined
இதையும் படிங்க: இனி ரேஷனில் பொருள் வாங்க ஸ்மார்ட் கார்டு தேவையில்லை; இந்த ஒரு APP போதும்; முழு விவரம்!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தகவல் தொழில்நுட்பத்துறையினர் உதவியுடன் காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர். அப்போது காரில் இருந்து கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 52 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் பாஜக வெற்றிக்கு இவர் தான் காரணம்! பரபரப்பு சர்வே முடிவுகள்!
இந்த சம்பவம் தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். ஆனால் 10 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வருமான வரி சோதனைக்கு பயந்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் காரில் நகைகள், பணத்தை மறைத்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.