கொரோனாவின் கொடுமை போதாதா? இந்தியாவிற்கு ஏழாம் பொருத்தமான மே 7.. இன்று ஒரேநாளில் நாட்டை உலுக்கிய 3 விபத்துகள்

By karthikeyan VFirst Published May 7, 2020, 7:19 PM IST
Highlights

கொரோனாவால் மக்கள் அல்லப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில், விசாகப்பட்டினம், ராய்கார், நெய்வேலி ஆகிய மூன்று இடங்களில் மோசமான விபத்துக்கள் அரங்கேறியுள்ளது. 
 

கொரோனாவால் உடல் ரீதியான பிரச்னைகளை மனித குலம் சந்தித்துவரும் நிலையில், அதைத்தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதார ரீதியான சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர். கொரோனாவால் இதுவரை இந்தியாவில் 1700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக பல கஷ்டங்களை நாடும் நாட்டு மக்களும் எதிர்கொண்டுவருகின்றனர். 

கொரோனா படுத்தும் கொடுமையே படுமோசமானது. இந்நிலையில், அது போதாதென்று, இன்று ஒரே நாளில் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இடங்களில் மூன்று மோசமான விபத்துக்கள் அரங்கேறி மக்களை இன்னும் அதிகமாக கொடுமைப்படுத்தியுள்ளது. 

1. விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து ஸ்டைரின் என்ற விஷவாயு வெளியானதில், அந்த ஊரை சுற்றியுள்ள  5 கிராமங்களை சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

குழந்தைகள், சிறுவர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மூச்சு விட முடியாமல், மயக்கமடைந்து விழுந்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. விஷவாயு வெளியான இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. 

மனிதர்கள் மட்டுமல்லாமல் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளும் வாயில் நுரை தள்ளி கீழே விழுந்து உயிரிழந்தன. இன்று காலை நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்திலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முன் அடுத்த விபத்து.

2. சத்தீஸ்கர் மாநிலம் ராய்காரில் காகித ஆலையில் விஷவாயு கசிவு:

சத்தீஸ்கர் மாநிலம் ராய்காரில் இயங்கிவரும் காகித ஆலையில், ஒரு தொட்டியை தொழிலாளர்கள் சுத்தப்படுத்தியபோது, அதிலிருந்து விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 

3. என்.எல்.சி பாய்லர் வெடித்து பயங்கர விபத்து:

நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2வது ஆலையின் 6வது யூனிட்டில் திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. என்.எல்.சிக்கு உள்ளேயே தீயணைப்பு வீரர்கள் இருப்பார்கள். எனவே அவர்கள் உடனே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் கூடுதலாக தீயணைப்பு படையினரும் அங்கு சென்று தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடந்த இந்த மூன்று விபத்துகள் நாட்டு மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!