
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 15 மாதங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது. இது கடந்த 2005ம் ஆண்டு முடக்கியதைக் காட்டிலும் அதிகமாகும்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதி துறை இணைஅமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் வௌ்ளிக்கிழமை கூறுகையில், “ கடந்த ஒரு ஆண்டாக ரூ.11 ஆயிரத்து 32 கோடி அமலாக்கப்பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2005முதல் 2015ம் ஆண்டு வரை முடக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாகும். இந்த 10 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரத்து 3 கோடி முடக்கப்பட்ட நிலையில்,ஒரு ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி முடக்கப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.
இதில், நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் ரூ.965 கோடி முடக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூன் 30-ந்தேதி வரை ரூ.22 ஆயிரம் கோடி முடக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்கள் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி முடக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த தேடுதல்களும், சொத்துக்களை பறிமுதல் செய்த நடவடிக்கையும், கடந்த 15 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் குறிப்பாக சேகர் ரெட்டி, மதுரை கிரனைட் போன்றவைகளும் இந்த காலகட்டத்தில் முடக்கப்பட்டவையாகும்.
வருமானவரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய புலனாய்வு அமைப்புகளுடன் உதவியுடன் அமலாக்கப்பிரிவு இந்த நடவடிக்கைகலை எடுத்துள்ளது. மேலும், மத்திய கார்ப்பரேட் துறை அமைச்சகத்தின் உதவியுடன், கருப்பு பணத்தை பதுக்க உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த போலி நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் நாட்டில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டதை அமலாக்கப்பிரிவு கண்டுபிடித்தது.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம், ரூ.78 கோடியை 6 போலி நிறுவனங்கள் மூலம் வௌிநாட்டுக்கு அனுப்பிய 36 வயது நபரை அமலாக்கப்பிரிவு கைது செய்தது. இம்மாதம் 12-ந்ேததி 1.62 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பதிவு ரத்து செய்யப்படடுள்ளது. இதில் 32 சதவீதம், அதாவது, 52 ஆயிரத்து 391 நிறுவனங்கள் தென் மாநிலங்களில் இருக்கின்றன.
மேலும் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி அமலாக்கப்பிரிவு நாடுமுழுவதும் நடத்திய சோதனையில் 10 மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிராக, குறிப்பாக தமிழகம், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இ.பி.எப்.ஓ. அதிகாரிகளுக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது.