
கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடங்கிய 2 நாட்களில் தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழையும், சில இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. இதில், 5க்கு மேற்பட்டோர் பலியானார்கள்.
ஆனால், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒரு மூட்டை கொண்டு செல்லும்போது கீழே விழுந்தால், தானாகவே ‘ஆம்லெட்’ ஆகும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.
இதனால் வேலை, வியாபாரம், தொழில் என பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக முதியோர், நோயாளிகள், பெண்கள் பெரும் சிரமம் அடைகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், வெயில் கொடுமையால் 100க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 5 இடங்களில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியற்கு மேலாக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 23 இடங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரியை தாண்டி இருந்தது. இதையொட்டி விஜயவாடாவில் 41.6 டிகிரி, நெல்லூரில் 44 டிகிரி என பதிவாகி உள்ளன.
கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரித்து வரும் வெயிலுக்கு இதுவரை 100க்கு மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், ஆந்திர மாநிலத்தில் மட்டும் 87 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திராவில் தற்போதுள்ள வெப்பநிலையே மே 23 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.