
ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகளை கடத்த முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பா.ஜனதா தலைவர் மகன் விகாஸ் பராலா , அவரின் நண்பர் இருவரையும் 2 நாள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ்(வயது23). இவர் கடந்த வௌ்ளிக்கிழமை இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார்(வயது27) என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை 5.கி.மீ. வரை பின்தொடர்ந்து விரட்டி, விரட்டி தொல்லை கொடுத்தார். பின் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகள் எனத் தெரியவந்தது.
அந்த பெண் கொடுத்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விகாஸ்பராலா மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நெருக்கடி, ஊடகங்களின் தொடர் ஒளிபரப்பு காரணமாக, குற்றம்சாட்டப்பட்ட விகாஸ் பராலா, ஆஷிஸ் குமார் இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணை கடத்துவதற்கான முகாந்திரம் இருந்தது தெரியவந்தது.
அதற்கு ஏற்றார்போல் நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புகேமராக்களை ஆய்வு செய்த போலீசார், ஆதாரங்களைத் திரட்டினர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் கூட்டம் கடுமையாக கூடி இருந்தது.
கைது செய்யப்பட்ட இருவரிடமும், 2 நாள் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும், நடந்த சம்பவத்தை மீண்டும் அதேபோல செய்து காட்டச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிபர்ஜிந்தர் பால் சிங், ஆகஸ்ட் 12-ந்தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.