
திருவெண்காடுசுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் மூலவர் சிவபெருமான் பெயர்சுவேதாரண்யேஸ்வரர் இறைவி பெயர் பிரம்ம வித்யா நாயகி இருவரும் அருள் பாலிக்கின்றனர் இக்கோயிலுக்கு பல பெருமைகளும் உண்டு மிகப் பழமையான கோயிலாகவும் இக்கோயில் கருதப்படுகிறது, காசி கோயிலுக்கு நிகரான 6 கோயில்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது காசியை விட 21 தலைமுறை செய்த பாவங்களை மன்னித்து அருளும் திருத்தலம் ஆகும்.
சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் பல வரலாற்று பின்னணிகள் இங்கு புதைந்துள்ளன கோயிலில் முனிவர்களும் தேவர்களும் எத்தனை பேர் இங்கு வந்து வழிபட்டினார்கள் என்று பார்க்கும்போது மிக ஆச்சரியமாகவே இருந்து வருகிறது இக்கோயிலின் வரலாறு மிகப் பழமையானது என்றும் கூறப்படுகிறது. வடக்கே உள்ள காசிக்கு எவ்வளவு வரலாறு இருக்கின்றதோ அதே அளவு திருவெண்காடுக்கும் இருக்கின்றது.சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,பிரம்மன், இந்திரன், வெள்ளையானை, சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கிருஷ்ண த்வைபாயனர் முதலியோர் இந்த கோயிலில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளனர். இதனைப் பற்றிய தெளிவாக பார்க்கலாம்
இந்திரன் ஐராவதம் என்னும் தன் வெள்ளை யானையின் மேல் பவனி வந்தபோது துருவாச முனிவர் தந்த மாலையை மதியாது வாங்கி, யானையின் மத்தகத்தின் மேல் வைக்க, யானையோ அம்மாலையைக் காலிலிட்டு மிதித்தது. துருவாசர் சினந்து யானையைக் காட்டானை ஆகுமாறு சபித்தார். பின்னர் யானை தவறுக்கு வருந்தி, முனிவரைப் பணிந்து சாபவிமோசனம் வேண்டியது. முனிவர், திருவெண்காட்டீசரைச் சென்று தொழச் சாபம் நீங்குமென்றார். அதன்படி ஐராவதம் திருவெண்காட்டில் சில காலம் காட்டானையாகத் திரிந்தது. பின்னர் திருவெண்காட்டில் ஈசான திசையில் தன் பெயரில் ஒரு தடாகம் அமைத்துச் சிவலிங்கம் ஸ்தாபித்து, வழிபாடியற்றி ஈசன் அருள் பெற்று மீண்டும் இந்திரலோகம் சேர்ந்தது. யானை அமைத்த தடாகம் இன்றும் யானை மடு என்று வழங்குகிறது.
விருத்திராசுரனைக் கொன்ற பாவத்தை இங்கு திருவெண்காடரை வழிபட்டு நீக்கிக்கொண்டான் இங்கு நடைபெறும் மஹோத்சவம் இந்திர மஹோத்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்திரனே வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம் .
முற்கல முனிவரின் குமாரரான சிவப்பிரியர் திருவெண்காட்டிற்கு வந்து ஈசனை வழிபாடு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தாமரை மலர்களைக் கொய்து வரும்போது ஐராவதமெனும் யானையால் தாக்கப்பட்டார். அவர் நெஞ்சினுள் அஞ்செழுத்து அழுந்தியிருந்ததால் யானையின் கொம்புகள் அவரைக் குத்தாது யானையின் முகத்தில் அழுந்தி வயிற்றினுட் சென்றது. யானை நல்லுணர்வு பெற்றுச் சிவப்பிரியரிடம் மன்னிப்பு வேண்டியது சிவப்பிரியர் அதனை மன்னித் தருளினார். பின்னர் வைகாசி மாதத்திலன் அமாவாசையில் சிவப்பிரியர் சிவஜோதியில் கலந்தார்.
சுவேதன் என்னும் மன்னர் வாதாபி எனும் தன் மகனுக்கு அரசாட்சியை அளித்து விட்டு, தன் மனைவி சுலோசனையுடன் வானப்பிரஸ்தாச்சிரமத்தில் இருக்கையில், தன் மனைவியைப் பிரிந்த பின்னர் சாவில்லாத வரந்தரும் திருவெண்காட்டை அடைந்து தவமும் வழிபாடும் செய்து வந்தார். ஒருநாள் எமன் சுவேதனை அணுகிப் பாசத்தைப் பூட்டினான். சுவேதன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். அப்போது திருவெண்காடர் அங்கே தோன்றக் காலன் அஞ்சி ஓடி வீழ்ந்திறந்தான். சிவபெருமான் சுவேதனுக்குச் சிவசொரூபமளித்தார். பின்னர் தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி எமனையும் எழுப்பியருளினார்.
வால்மீகி ராமாயணத்தில் ஸ்வேதாரண்யம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவேதாரண்ய க்ஷேத்திரத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரதூஷணாதிகளை இராமன் சம்ஹாரம் செய்தான் என்று வான்மிகி குறிப்பிட்டுள்ளார்.
சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்ணிலிருந்து சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. சம்பந்தரை இடுப்பில் இடுக்கிய பிள்ளை இடுக்கி அம்மன்: இத்தலத்தின் வட எல்லைக்கு திருஞான சம்பந்தர் வந்த போது ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் கால் வைக்க பயந்து அம்மா என்றழைத்தார். குரலைக் கேட்ட பெரியநாயகி அன்னை இவரை தன் இடுப்பில் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் வந்தார். திருஞான சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோவிலின் பிரகாரத்தில் உள்ளது .
சுவேதாரண்யேஸ்வரர் மூலவராக உள்ளார். கோவில் ஏழு நிலை ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுவேதாரண்யேஸ்வரர், அகோரர், நடராஜர் என பல ரூபங்களில் சிவன் அருள்பாலிக்கிறார். விநாயகர், மெய்கண்டார், அம்பாள் அம்மா வித்யநாயகி உள்ளிட்ட ஏராளமான சன்னதிகள் அமைந்துள்ளன.சுப்பிரமணியர் மண்டபம், ஆறுமுகர் சன்னதி ஆகியவற்றை தொடர்ந்து அம்பாள் சன்னதி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள விநாயகர் பெரியவாரணர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் இங்கு புரிந்ததால் இத்தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது என்றும், விஜயநகர அரசர்களால் 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. துர்க்கை, காளி, நடராஜர், வீரபத்திரர் ஆகியோரின் சன்னதிகள் ஆதித்ய சோழன் மற்றும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.