
கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே தமிழகத்தின் ஆன்மிக பூமியான திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுவிடும். எங்கு பார்த்தாலும் அண்ணாமலையாரின் நாமம், கோயில்களில் ஒலிக்கும் சிவ மந்திரங்கள், வீடுகளில் ஏற்றப்படும் அகல் விளக்குகள் என எங்கும் பக்திப் பரவசம் நிறைந்திருக்கும்.
ஆனால், இந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மகா தீபம் ஏற்றப்படும் அந்தத் தருணத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருப்பார்கள். 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சியில், மாலை நேரத்தில் வானையே ஒளிரச் செய்யும் வகையில் ஏற்றப்படும் மகா தீபம் சாதாரணமான விளக்கு அல்ல.
பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஆன்மிக மரபு, பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான தீபக் கொப்பரை, மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும் திருப்பணி, பல ஆயிரம் லிட்டர் நெய், திரி என ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
குறிப்பாக, ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரை எப்படித் தயாரிக்கப்படுகிறது? அது எத்தனை ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது? மலை உச்சிக்கு அதை எப்படிக் கொண்டு செல்கிறார்கள்? தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் என்னென்ன? என்பது பலரும் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்கள். இந்த மகா தீபக் கொப்பரையின் சிறப்புகளையும், அதன் பின்னணியில் உள்ள ஆன்மிக மரபுகளையும் விரிவாகப் பார்க்கலாம்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றுதான் மகா தீபக் கொப்பரை. அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய உலோகப் பாத்திரமே மகா தீபக் கொப்பரை எனப்படுகிறது.
இதில் அதிக அளவு நெய் ஊற்றப்பட்டு, நீளமான காடா துணி திரியாகப் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ந்து பல நாட்களுக்கு ஜோதி ஒளிரச் செய்யப்படுகிறது.
இந்தக் கொப்பரை சாதாரண சமையல் பாத்திரம் போன்றது கிடையாது. அதிக வெப்பத்தைத் தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழாவுக்கு முன்பாகப் பராமரிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு வழிபாடுகளுடன் தயார்படுத்தப்படுகிறது.
மகா தீபக் கொப்பரையின் உயரம், எடை என்ன?
உயரம் - சுமார் 5 முதல் 6 அடி வரை
எடை - சில ஆண்டுகளில் சுமார் 130 முதல் 300 கிலோ வரை
மகா தீபக் கொப்பரை எத்தனை ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது?
மகா தீபக் கொப்பரை காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டும், புதுப்பிக்கப்பட்டும் வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மண்ணு நாட்டார் என்பவர் முதல் கொப்பரையைத் தயாரித்ததாக கூறப்படுகிறது.
2003-ஆம் ஆண்டு இரும்பு மற்றும் செம்பு கலந்த உலோகத்தால் புதிய கொப்பரை உருவாக்கப்பட்டது. அது 13 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முழுவதும் செம்பினால் செய்யப்பட்ட புதிய கொப்பரை உருவாக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், சுமார் 5 அடி உயரமும் 200 கிலோ எடையும் கொண்ட கொப்பரை பயன்படுத்தப்பட்டாதாக கூறப்படுகிறது.
மகா தீபக் கொப்பரையை உருவாக்குவதற்கு செம்பு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய கொப்பரைக்கு சுமார் 200 கிலோ தூய செம்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிரது.
அடிப்பாகம் மற்றும் மேற்பகுதி
கொப்பரையின் அடிப்பாகம், மேற்பகுதி எனத் தனித்தனியாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஒன்றாக இணைக்கப்படுகிறது. இதன் உறுதித்தன்மையை அதிகரிக்க உலோகப் பகுதிகளும் பொருத்தப்படுகின்றன.
வெப்பத்தைத் தாங்கும் வகையில் அமைத்தல்
தொடர்ந்து பல நாட்கள் எரியும் தீயின் வெப்பத்தைத் தாங்கும் வகையில் கொப்பரை உருவாக்கப்படுகிறது. அதிக வெப்பத்தால் உலோகம் பாதிக்கப்படாமல் இருக்க அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஓவியங்கள் மற்றும் ஆன்மிக அடையாளங்கள்
கொப்பரையில் சிவபெருமானின் அடையாளங்களான சிவலிங்கம், நந்தி, அர்த்தநாரீஸ்வரர் போன்ற திருவுருவங்கள் வரையப்படுவது சிறப்பம்சமாகும். குறிப்பாக, ஆண், பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் திருவடிவம் மகா தீபக் கொப்பரையில் இடம்பெறுவது தனிச்சிறப்பு.
இதுதான் இந்தத் திருவிழாவின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சவாலான பணிகளில் ஒன்று. 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சிக்குக் கொப்பரையை எடுத்துச் செல்வது சாதாரண விஷயமல்ல. அதற்கெனப் பாரம்பரியமாகப் பயிற்சி பெற்ற தீப நாட்டார் குழுவினர் ஈடுபடுகின்றனர்.
மகா தீபத்தின் மற்றொரு சிறப்பம்சம் அதற்குப் பயன்படுத்தப்படும் நெய்யின் அளவு. சிறிய அகல் விளக்கில் சில துளி எண்ணெய் ஊற்றி ஏற்றுகிறோம். ஆனால் 2,668 அடி உயர மலையில் பல நாட்கள் தொடர்ந்து எரியும் மகா தீபத்துக்கு ஆயிரக்கணக்கான கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.
2022 - சுமார் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2023 - 5 டன் நெய் மற்றும் 1 கிலோமீட்டர் நீளமுள்ள காடா துணி மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
2026 - ஆம் ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் இந்த 4,500 கிலோ நெய்யும் ஆவின் (Aavin) நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மகா தீபத்துக்குப் பயன்படுத்தப்படும் திரியின் சிறப்பு என்ன?
மகா தீபத்தில் பயன்படுத்தப்படும் திரி சாதாரண சிறிய பஞ்சுத் திரி கிடையாது. இதற்காக நீளமான காடா துணி பயன்படுத்தப்படுகிறது. இந்தத் துணி ஒன்றாகச் சுருட்டப்பட்டு, பெரிய திரியாகத் தயாரிக்கப்படுகிறது.
மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு நடைபெறும் பரணி தீபத்தின் சிறப்பு என்ன?
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பரணி தீபம். மகா தீபம் ஏற்றப்படும் நாளன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலின் கருவறை அருகே பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
இந்தத் தீபம் ஐந்து அகல் விளக்குகளைக் கொண்டு ஏற்றப்படும் மரபைக் கொண்டது. பஞ்சபூதங்களைக் குறிக்கும் வகையில் இந்த ஐந்து தீபங்களும் அமைந்துள்ளதாக ஆன்மிக ரீதியாக விளக்கப்படுகிறது. அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
மகா தீபம் எத்தனை நாட்கள் தொடர்ந்து எரியும்?
திருவண்ணாமலை மகா தீபத்தின் மற்றொரு முக்கிய சிறப்பு அதன் நீண்ட நேர ஒளியாகும். மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு தொடர்ந்து 11 நாட்கள் எரியச் செய்வது பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறது. இதற்காகத் தேவையான நெய் மற்றும் திரி முன்கூட்டியே மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. தீபம் எரியும் நாட்களில் தேவைக்கேற்ப நெய் சேர்க்கப்படுகிறது.
மகா தீபம் ஏற்றப்பட்டு 11 நாட்கள் நிறைவடைந்ததும் கொப்பரையை அப்படியே மலை உச்சியில் விட்டுவிடுவதில்லை. தீபம் நிறைவடைந்த பிறகு, பாரம்பரிய தீப நாட்டார் குழுவினர் கொப்பரையைப் பாதுகாப்பாக மலை உச்சியிலிருந்து கீழே இறக்கி வருகின்றனர்.
அதன்பிறகு கோயிலில் அதற்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து அடுத்த ஆண்டு தீபத் திருவிழாவுக்குத் தேவையான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.