ஜோதிடமும், வானவியலும் ஒன்றுடன் பிணைந்து காணப்படுகின்றன. இந்த இரண்டு வேதங்களிலும் கிரகங்கள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. சாஸ்திரப்படி, ஜனவரி 17ஆம் தேதி சனி கிரகம் மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்குள் நுழைந்தது. தொடர்ந்து ஜனவரி 22ஆம் தேதி சுக்கிரனும் இந்த ராசியில் நுழைந்தார். இன்று (ஜன.23) சந்திரனும் கும்பத்தில் நுழைகிறார். இப்படியாக கும்பத்தில் திரிகிரஹ யோகம் உருவாகி வருகிறது. இந்த மூன்று கிரக சந்திப்பு நிலையை இன்று மாலை வானில் காணலாம். தொலைநோக்கி ஏதுமின்றி வெறும் கண்களால் வானில் காண முடியும்.
இந்த அரிய காட்சி எப்படி இருக்கும்?
ஸ்ரீ கல்லாஜி வேத பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறைத் தலைவர் டாக்டர் மிருத்யுஞ்சய் திவாரி கூறுகையில்,"ஜனவரி 23ஆம் தேதி அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, சந்திரன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மேற்கில் ஒன்றாகத் தோன்றும். இதனை ஜோதிட மொழியில் திரிகிரஹ யுதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திரன், வெள்ளி, சனி ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருக்கும்"என்றார்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மேற்கில் ஒரு பிறை வடிவ நிலவு தெரியும். சந்திரனுக்குக் கீழே, சுக்கிரன் தெற்கே ஒரு உச்சியைப் போல் பிரகாசிப்பதாகத் தெரியும். அதே நேரம் சுக்கிரன் கிரகத்திற்கு கீழேயும் சனி கிரகத்தை பார்க்க முடியும்.