Naga Panchami 2025: கடுமையான தோஷங்களை விலக்கும் நாக பஞ்சமி.. வீட்டில் இப்படி வழிபடுங்கள்.!

Published : Jul 29, 2025, 11:46 AM ISTUpdated : Jul 29, 2025, 11:55 AM IST

நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி ஆகியவை ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களாகும். இவை முறையே பாம்புகளையும், கருடனையும் வழிபடுவதற்கான நாட்கள். இந்த இரண்டு தினங்களும் 2025 ஆம் ஆண்டில் ஒரே நாளில் வருகின்றன.

PREV
16
நாக பஞ்சமியின் சிறப்புகள்

நாக பஞ்சமி என்பது நாக தேவதைகளை வழிபடுவதற்கான நாளாகும். இந்து கலாச்சாரத்தின் படி பாம்புகள் தெய்வீக சக்தி கொண்டவையாகவும், பூமியின் பொக்கிஷங்களை பாதுகாப்பவையாகவும் கருதப்படுகின்றன. நாகபஞ்சமி தினத்தில் நாகங்களை வழிபடுவது என்பது ஜாதகத்தில் உள்ள நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களை விலக்கும் என்பது ஐதீகம். பாம்பு கடி ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெறவும், விஷ ஜந்துகளால் ஏற்படும் தீங்குகளை தவிர்க்கவும் நாக பஞ்சமி நாளில் வழிபாடு செய்யலாம். நாக தேவதைகள் செல்வத்தின் காவலர்களாக கருதப்படுவதால் அவர்களை வழிபடுவது குடும்பத்தில் செழிப்பையும், நல்லிணக்கத்தையும் கொண்டுவரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத் தடை இருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து நாகதேவதையை வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

26
கருட பஞ்சமியின் சிறப்புகள்

ஒரு புராணக் கதையின்படி ஒரு பெண் பாம்பினால் இறந்த தன் சகோதரர்களை இறையருளால் உயிர் பெற வைத்த நாள் என்பதால் இந்த நாளில் பூஜை செய்வது கணவனுக்கும், சகோதரர்களுக்கும் ஆயுள் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. கருட பஞ்சமி என்பது மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனை வழிபடும் நாளாகும். ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருட பகவான் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. கருடனை வழிபடுவது சகல தோஷங்களையும் விலக்கும், குறிப்பாக சர்ப்ப தோஷங்கள் விலகுவதற்கு கருட வழிபாடு சிறந்தது என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. கருட பகவான் விஷ ஜந்துகளுக்கு எமன் போல கருதப்படுவதால் அவரை வழிபடுவதன் மூலம் விஷ ஜந்துகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், பயணங்களின் போது பாதுகாப்பாக இருக்கவும், கருட வழிபாடு செய்யப்படுகிறது. திருமணமான பெண்கள் கருட பஞ்சமியில் விரதம் இருந்து வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.

36
நாக பஞ்சமி, கருட பஞ்சமி வழிபடுவது எப்படி?

கருடனைப் போலவே புத்தி மானாகவும் வீரனாகவும் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்ற விரும்புபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு நடத்தலாம். கருட வழிபாடு என்பது பகைவர் தொல்லையிலிருந்து விடுபடவும், எம பயம் நீங்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. நாகபஞ்சமி மற்றும் கருட பஞ்சமி வழிபாடுகளை கோயில்களிலும் வீடுகளிலும் மேற்கொள்ளலாம். அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை அணிந்து பூஜை அறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். ஐந்து நிறங்களில் கோலமிட்டு நடுவில் ஒரு மணப்பலகை போட்டு, அதன் மேல் நுனி வாழை இலை வைக்கலாம். நாகர் சிலைகள் (கல் அல்லது வெள்ளியில்), நாகர் படங்கள், கருடன் படங்களை வைத்து வழிபடலாம். சிலர் மஞ்சள் கொண்டு நாகர்களை வரைந்தும் வழிபடுவார்கள். நாகர் சிலைகளுக்கு காய்ச்சாத பால், மஞ்சள், குங்குமம், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

46
வீட்டில் நாக பஞ்சமி வழிபாட்டு முறைகள்

பால், பழங்கள், இனிப்புகள், அவல், பொரி, மஞ்சள், குங்குமம், பருத்தியால் செய்யப்பட்ட துண்டு போன்றவற்றை படைக்க வேண்டும். கருடனுக்கு துளசி தீர்த்தம், காய்ச்சாத பசும்பால், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பாயாசம், வடை ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம். அவர்களுக்கு உரிய “ஓம் சர்ப்பயோ நமஹ”, “ஓம் நமச்சிவாய”, ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்பவர்த்தனம்” போன்ற மந்திரங்களை உச்சரிக்கலாம். நாகராஜா துதியையும் கூறலாம். கருட பஞ்சமிக்கு காயத்ரி மந்திரம், கருட மாலா மந்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை படிக்கலாம். நாகபஞ்சமி மற்றும் கருட பஞ்சமி அன்று ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதமிருப்பது நல்லது. அருகில் உள்ள நாகர் கோயில்கள், புற்றுக் கோயில்களுக்கு சென்று பால் ஊற்றியும் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம். கருடாழ்வார் சன்னதிகளுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

56
மறக்காமல் கோயில்களுக்கு செல்லுங்கள்

பாம்பு புற்றுகளுக்கு பால் ஊற்றுவது என்பது நாக தேவதையை சாந்தப்படுத்தும் முக்கிய வழிபாடாகும். வீட்டில் வழிபாடுக்கு வைத்திருந்த பாலை நெய்வேதியம் செய்த பிறகு கிணற்றிலோ, மரத்தடியிலோ ஊற்றி விட வேண்டும். கருட பஞ்சமியில் சிவப்பு கயிற்றில் 10 முடிச்சுகள் போட்டு அம்பிகையின் வலப்புறமாக வைத்து பூஜை செய்து அதை கைகளில் கட்டிக் கொள்வது நன்மை பயக்கும். வீட்டில் நாகர் சிலை அல்லது படம் இல்லாவிட்டால் நாகத்தின் உருவத்தை வரைந்தோ அல்லது பூஜை அறையில் தூய்மையான இடத்தில் பூக்களால் நாகர்களை நினைத்து அலங்காரம் செய்து வழிபடலாம். கருட பகவானின் படம் அல்லது விஷ்ணுவுடன் கூடிய கருடனின் படத்தை வைத்து வழிபடலாம். இந்த வழிபாடுகள் மூலம் நாகதோஷங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி செல்வம் மற்றும் குழந்தைகள் பிறக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை ஆகும்.

66
வழிபட உகந்த நேரம்

ஜூலை 29 2025 செவ்வாய்க்கிழமை ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் இந்த வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பஞ்சமி திதியானது ஜூலை 29 அதிகாலை 1:23 மணிக்குத் தொடங்கி ஜூலை 30 அதிகாலை 2:29 வரை உள்ளது. வழிபாட்டிற்கான நேரம் காலை 6:00 மணி முதல் 8:45 வரையிலும், மீண்டும் காலை 10:35 மணி முதல் பகல் 1:00 வரையிலும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாகர் வழிபாட்டிற்கு ராகு காலம் சிறந்தது. இந்த காலத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை விளக்கேற்றிய பின்னர் வீடுகளில் பூஜை செய்யலாம் அல்லது கோயில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு பலன்களைப் பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories