
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் சில மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு கார்த்திகை அமாவாசை திதியானது இரண்டு நாட்களில் வருகிறது. அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கும், பித்ருக்களின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்த நாளாகும். 2025 ஆம் ஆண்டுக்கான கார்த்திகை அமாவாசை குறித்த முக்கிய நேரங்கள், விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை அமாவாசை திதியானது நவம்பர் 19, 2025 புதன்கிழமை காலை 9:43 மணிக்கு தொடங்கி நவம்பர் 20, 2025 வியாழக்கிழமை பிற்பகல் 12:16 மணிக்கு முடிவடைகிறது. நவம்பர் 19, 2025 புதன்கிழமை பகல் வேளை தர்ப்பணம், பித்ரு காரியங்கள் செய்ய உகந்த நாளாகும். விரதம் மற்றும் முன்னோர்களுக்கான காரியங்களை செய்ய நவம்பர் 19 புதன் கிழமை உகந்த நாளாக கூறப்பட்டுள்ளது.
அமாவாசை தினத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரத முறைகள் குறித்து இங்கு பார்க்கலாம். அமாவாசை அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். முடிந்தால் புனித நதிகள் அல்லது கடலில் நீராடுவது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் வீட்டில் நீராடும் பொழுது புனித நதியை மனதில் நினைத்து நீராடலாம். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். முன்னோர்களுக்கான காரியங்களை முடித்து, காகத்திற்கு உணவளித்த பின்னரே விரதத்தை முடிக்க வேண்டும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் கொடுக்க நினைப்பவர்கள் நீர்நிலைகள் அல்லது கடற்கரைகளில் கொடுக்கலாம். நம் முன்னோர்களின் பெயர், கோத்திரம் ஆகியவற்றை சொல்லி எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் முன்னோர்களின் படங்களை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்கரித்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையலிட வேண்டும். படையலிட்ட உணவை முதலில் காகத்திற்கு வைத்து, அதன் பின்னரே வீட்டில் உள்ள அனைவரும் உணவருந்த வேண்டும்.
கார்த்திகை அமாவாசை நாளில் பின்வரும் முக்கியமான செயல்களை செய்வது பித்ரு தோஷத்தை போக்கி முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தர உதவும்.
அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானதாகும். அருகில் உள்ள புனித நதிகள் அல்லது கடலில் நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய உதவும். புனித நதிகளில் நீராட முடியாதவர்கள், வீட்டில் குளிக்கும் நீரில் கங்கா தீர்த்தம் அல்லது புனித நதியை மனதில் நினைத்து “ஓம் நமோ நாராயணாய:” மந்திரத்தைச் சொல்லி குளிக்கலாம்.
அமாவாசை நாளில் அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும். மாலையில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட வேண்டும். பின்னர் அரச மரத்தடியில் அகல் விளக்கு ஒன்றை வைத்து நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் ஊற்றி திரியிட்டு “ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ:” என்கிற மந்திரத்தை உச்சரித்தபடி விளக்கேற்ற வேண்டும். அதன் பின்னர் மரத்தை மூன்று முறை வலம் வந்து வழிபடுவது பித்ரு தோஷத்தை நீக்கும்.
அமாவாசை தினத்தில் மாலை வேலையில் சூரியன் மறைவுக்கு பின்னர் வீட்டில் கண்டிப்பாக விளக்கு ஏற்ற வேண்டும். குறிப்பாக வீட்டின் முற்றங்கள், நிலை வாசல் அல்லது துளசி செடிக்கு அருகில் விளக்கு ஏற்றுவது சிறப்பு. இந்த விளக்கு மீண்டும் மோட்சத்திற்கு திரும்பும் முன்னோர்களுக்கு ஒளி காட்டுவதற்காக ஏற்றப்படும் தீபமாகும். இந்த தீபத்தை மாலையில் மறக்காமல் ஏற்ற வேண்டும்.
முன்னோர் வழிபாடு முடிந்த பின்னர் அமாவாசை தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பு. குலதெய்வத்தின் அருளும், முன்னோர்களின் ஆசியும் ஒருங்கே கிடைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டில் பூஜைகள் முடிந்த பின்னர் ஏழைகள், ஆதரவற்றவர்கள், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது பெரும் புண்ணியத்தைத் தரும். உணவு, உடை, பணம் போன்றவற்றை தானங்களை வழங்குவது செல்வ வளங்களை அதிகரிக்கும்.
அமாவாசை தினத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பகவானை வழிபடுவது மிகவும் விசேஷமாகும். சிவன் வழிபாடு நாம் செய்த கர்ம பாவங்களை போக்கி வாழ்வில் வளமை சேர்க்கும். விஷ்ணு வழிபாடு என்பது செல்வ வளத்தையும் வெற்றியையும் அளிக்கும். ஆலயங்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சிவன் அல்லது பெருமாள் புகைப்படங்களை வைத்து வாசனை மலர்கள் சாற்றி அவர்களின் திருநாமங்களை உச்சரித்து வழிபடலாம்.
அமாவாசை தினத்தில் மாவிளக்கு ஏற்றுவது என்பது மிகுந்த சிறப்பானதாகும். இடித்த பச்சரிசி மாவில் சிறிது வெல்லம் கலந்து ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து விளக்கு போல் செய்து அதில் நெய் ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். பூஜை முடிந்த பின்னர் இந்த இதை பிரசாதமாக வீட்டில் உள்ள அனைவரும் உண்ண வேண்டும். இந்த மாவிளக்கு என்பது துன்பங்களை நீக்கி, வாழ்வில் செல்வம், வளம், மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)