Melmalayanur temple: 4 ஆண்டுகளுக்கு பிறகு மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம்..!

First Published | Nov 17, 2023, 12:44 PM IST

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பழுதடைந்து இருந்த தங்கத்தேர் சரி செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. 
 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தங்கத்தேர் பழுதடைந்தது. இதனையடுத்த தேரினை புதுப்பிக்கும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து நேற்று மாலை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் துறைசார்ந்த அலுவலர்கள், திருக்கோயில் அறங்காவலர்கள், பூசாரிகள்  மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு;- 2010-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக தங்கத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு சிறு பழுது காரணமாக தங்கத்தேர் பவனி நிறுத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களில் ஓடாமல் இருக்கும் தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர் ஆகியவற்றை பழுது நீக்கி சாமிகள் பவனி வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 68 தங்கத் தேர்கள் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 16 கோடி ரூபாய் மதிப்பில் 3 புதிய தங்கத் தேர்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

ராமேஸ்வரத்திலும், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகி இருந்த தங்கத் தேர்கள் புதுப்பிக்கப்பட்டு தேர் பவனி துவங்கப்பட்டுள்ளது. திருத்தணியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகும், வடபழனி, திருச்செந்துாரில் 2 ஆண்டுகளுக்கு பிறகும் தங்கத் தேரோட்டம் நடந்துள்ளது. அதேபோல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Latest Videos

click me!