
திருமணம் என்பது இரண்டு குடும்பங்களை இணைக்கும் ஒரு முக்கியமான சடங்காகும். மணமகள் தனது பிறந்த வீட்டின் பிணைப்பை தாண்டி, புகுந்த வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கும் பொழுது சில சம்பிரதாயங்களையும், நம்பிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். இந்த நம்பிக்கைகள் பெரும்பாலும் இரு வீட்டாருக்கும் இடையில் எந்த விதமான மனக்கசப்போ, துரதிஷ்டமோ வந்துவிடக் கூடாது என்பதற்கான நல்லெண்ணத்துடன் கடைபிடிக்கப்படுகின்றன.
ஆன்மீக சாஸ்திரங்களின்படி திருமணமான பெண்கள் பிறந்த வீடுகளில் இருந்து புகுந்த வீட்டிற்கு சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது. அதில் முக்கியமான ஏழு பொருட்கள் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் இங்கே விரிவாக காணலாம்.
ஆன்மீக தகவல்களின்படி உப்பு மற்றும் புளியை பிறந்த வீட்டிலிருந்து எடுத்துச் செல்வது பிறந்த வீட்டின் லட்சுமி கடாட்சத்தை குறைத்து விடும் என்று நம்பப்படுகிறது. இந்த பொருட்களை அன்பளிப்பாகவோ கடனாகவோ எடுத்துச் செல்வது இரு குடும்பங்களுக்கும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. உப்பு ஒரு முக்கியமான உணவுப்பொருள் மற்றும் மங்களப் பொருளாகும். அதை பணம் கொடுக்காமல் எடுத்துச் சொல்வது பிறந்த வீட்டின் சுபிட்சத்தை பறித்து செல்வதற்கு சமமாகும். இந்த பொருட்களை பணம் கொடுத்து (சாதாரண விலையை கொடுத்தாவது) வாங்கிக் கொள்ள வேண்டும்.
கத்திரிக்கோல், கத்தி, அரிவாள்மனை, ஊசி போன்ற கூர்மையான இரும்பு பொருட்களை எடுத்துச் செல்வது இரு குடும்பங்களுக்கு இடையேயான உறவுகளை வெட்டி விடுவதைப்போல பிளவுபடுத்தும் அல்லது சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று நம்பப்படுகிறது. இது சண்டைகள், மனக்கசப்புகள் அல்லது உறவு முறிவுகளுக்கு வழிவகுக்கும். கூர்மை என்பது பிரிவினையும், வெட்டுக்காயங்களை குறிக்கும் குறியீடாக பார்க்கப்படுகிறது. எனவே திருமணம் போன்ற புதிய உறவுகள் மலரும் தருணத்தில் இது போன்ற பொருட்களை பிறந்த வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
பிறந்த வீட்டில் வைத்து வழிபட்ட குலதெய்வத்தின் புகைப்படங்கள், சிலைகள், அங்கு பயன்படுத்தப்பட்ட விளக்குகள், பூஜைப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. ஒரு வீட்டில் பயன்படுத்தப்பட்டு வழிபடப்பட்ட பூஜைப் பொருட்களை அப்படியே வேறு வீட்டிற்கு எடுத்துச் செல்வது பிறந்த வீட்டில் லட்சுமி கடாட்சத்தை மங்கச் செய்துவிடும். மேலும் குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்துக்கே உரியது. திருமணமான பெண் கணவரின் குல தெய்வத்தையே வழிபட வேண்டும். பயன்படுத்தாத பூஜை பொருட்களை தாராளமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் பழைய, ஏற்றி வழிபடப்பட்ட விளக்குகள் மற்றும் குலதெய்வத்தின் ஆசி இருக்கும் பொருட்கள் அதே வீட்டிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பம், அரிசி புடைக்கும் முறம், தானியங்களை அளக்கும் படியையும் பிறந்த வீட்டிலிருந்து பெண்கள் எடுத்துச் செல்லக்கூடாது. இவை மகாலட்சுமி தாயார் மற்றும் நிதி நிலைமையுடன் நேரடியான தொடர்புடைய பொருட்களாகும். இவற்றை பிறந்த வீட்டில் இருந்து எடுத்துச் சென்றால் அது பிறந்த வீட்டிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், இருவீட்டாருக்கு இடையே பிரச்சனைகளை உண்டாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. தானியங்களை அளக்கும் படி ஆகியவை லட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதை இலவசமாக எடுத்துச் செல்வது பிறந்த வீட்டின் அதிர்ஷ்டத்தை எடுத்துச் செல்வது போன்றது.
பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை போன்ற கசப்பு சுவை கொண்ட உணவுப் பொருட்களை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லுதல் கூடாது. இது இரு குடும்பங்களுக்கு இடையே மனக்கசப்புகள், தேவையில்லாத சண்டைகள் மற்றும் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தும் என்று சாஸ்திரம் கூறுகிறது. கசப்பு சுவை பிரிவினையும், சண்டையையும் குறிக்கும் குறியீடாகும். இவற்றை வெளியிலிருந்து பணம் கொடுத்து வாங்கலாமே தவிர தாய் வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
நல்லெண்ணெய் பெரும்பாலும் ஈமச்சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் பொருளாக கருதப்படுகிறது. இதனை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்வது இரு குடும்பங்களுக்கு இடையில் இருக்கும் சிறிய மனக்கசப்புகள் கூட பெரிதாகி மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடும் என்று நம்பப்படுகிறது.
துவைத்த ஆனால் உலராத ஈரமான துணிகள் அல்லது மிகவும் பழைய கிழிந்த துணிகளை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. ஈரமான துணிகளை எடுத்துச் செல்வது எம பயத்தை உண்டாக்கும் என்றும், வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. பழைய துணிகளை எடுத்துச் செல்வது தரித்திரத்தை கொண்டு வரும் என கருதப்படுகிறது. எனவே துவைத்த துணிகளை நன்கு உலர்த்தி அதன் பின்னர் எடுத்துச் செல்வது நல்லது.
இந்த நம்பிக்கைகள் அனைத்தும் பாரம்பரிய வழக்கங்கள், வாஸ்து சாஸ்திரங்கள் மற்றும் மத அடிப்படையிலானவை மட்டுமே. அறிவியல் ரீதியான உண்மைகளாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் ஒரு பெண்ணின் புதிய வாழ்வில் எந்தவிதமான சிக்கல்களும் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், இரு குடும்பங்களின் உறவுகள் சீராகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் இவை பின்பற்றப்படுகின்றன.
இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஏழு பொருட்களையும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதன் மூலம் அல்லது புதியவற்றை வாங்கி செல்வதன் மூலம் மேற்கூறிய குறைபாடுகளை நீக்க முடியும் என்று சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)