இவரின் வடிவம் நமக்கு பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணியின் உருவத்தை நினைவுபடுத்துகிறது. ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர் காட்சி அளிக்கிறார். அதற்கு பிறகு அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன. நடு பழனி திருக்கோவிலுக்கு சென்றால் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் கூறப்படுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.