
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உண்மையிலேயே குற்றவாளியா என்பதைத் தீர்மானிப்பது யார்? சமூகமா அல்லது நீதிமன்றமா? குற்றம் சாட்டப்பட்டவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவருக்காக வாதாடும் உரிமை மறுக்கப்படலாமா? இப்படியான முக்கியமான கேள்விகளை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'சட்டமும் நீதியும் 2' இணையத் தொடர்.
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடரை, பிரதீப் மரியானுடன் இணைந்து எழுதி இயக்கியுள்ளார் பாலாஜி செல்வராஜ். பருத்திவீரன் சரவணன், வரலக்ஷ்மி சரத்குமார், லாவண்யா, கல்லூரி வினோத், ஆறு பாலா, பிரேம், கவிதா பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான முதல் பாகத்தைத் தொடர்ந்து, அதே தயாரிப்பாளர், நாயகன், இயக்குநர் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது பாகம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகமும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறதா? என்பதைப் பார்க்கலாம்.
பார் கவுன்சில் தலைவராக இருக்கும் பிரபல பெண் வழக்கறிஞரின் (வரலக்ஷ்மி சரத்குமார்) கணவர், உயர் போலீஸ் அதிகாரி (பிரேம்) ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழக்கிறார். இந்த மரணம் தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர், காவலர்கள் மற்றும் போலீஸ் வாகன ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், தங்களுக்கும் அந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர்கள் மறுக்கின்றனர்.
உயிரிழந்தவர் பார் கவுன்சில் தலைவரின் கணவர் என்பதால், கைது செய்யப்பட்ட காவலர்களுக்காக எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என்ற முடிவு எடுக்கப்படுகிறது. இந்தச் சூழலில், நோட்டரி பப்ளிக்காகப் பணியாற்றி வரும் நேர்மையான வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியை (சரவணன்), கைது செய்யப்பட்ட காவலர் ஒருவரின் மனைவி சந்திக்கிறார்.
மகளின் திருமணம் உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சுந்தரமூர்த்தியிடம், பணமும் அதிகாரமும் இல்லாதவர்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்காதா என அவர் எழுப்பும் கேள்வி சிந்திக்க வைக்கிறது. அந்தப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று, காவலர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட முன்வருகிறார் சுந்தரமூர்த்தி.
ஆனால், வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பிறகுதான் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன. உயிரிழந்த உயர் போலீஸ் அதிகாரியின் அதிகார அத்துமீறல்கள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள், மனைவியுடனான கருத்து வேறுபாடுகள் என ஒவ்வொரு விஷயமும் வழக்கை வேறு திசைக்கு அழைத்துச் செல்கின்றன.
மறுபுறம், கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களும் முழுமையான நல்லவர்களாக இல்லை என்பது தெரியவருகிறது. இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில் சுந்தரமூர்த்தியை வழக்கிலிருந்து விலகச் செய்ய மிரட்டல்களும் பண ஆசையும் காட்டப்படுகின்றன.
உண்மையில் நடந்தது கொலையா அல்லது தற்கொலையா? காவலர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா? இந்த மரணத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? இளம் உதவி வழக்கறிஞரான லாவண்யாவின் துணையுடன் சுந்தரமூர்த்தி உண்மையை வெளிக்கொண்டு வந்தாரா? என்பதே தொடரின் மீதிக்கதை.
முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக பருத்திவீரன் சரவணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நேர்மையை விட்டுக்கொடுக்க விரும்பாத வழக்கறிஞர், குடும்பப் பொறுப்புகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் தந்தை, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நீதிக்காகப் போராடும் மனிதர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரத்தை இயல்பாகக் கையாண்டுள்ளார்.
குறிப்பாக, நீதிமன்றத்தில் அவர் பேசும் விதம், எதிர்த்தரப்பு வாதங்களைக் கையாளும் நிதானம், நடை, உடை, உடல்மொழி என அனைத்திலும் ஒரு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை கண்முன் நிறுத்துகிறார். தேவையற்ற ஆர்ப்பாட்டமோ மிகைப்படுத்தப்பட்ட வசன உச்சரிப்போ இல்லாமல் கதாபாத்திரத்திற்குத் தேவையான அளவில் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
பார் கவுன்சில் தலைவராக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் தனது கதாபாத்திரத்திற்கேற்ற கம்பீரத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிகாரமும் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களும் கலந்த கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். சரவணனுக்கு உதவியாக வரும் இளம் வழக்கறிஞராக லாவண்யா சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். கல்லூரி வினோத், ஆறு பாலா, பிரேம், கவிதா பாரதி உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பவன் மற்றும் கல்லூரி வினோத்தின் நடிப்பு சில இடங்களில் தனித்துக் கவனம் பெறுகிறது.
ஒரு பக்கம் மரணத்திற்குப் பின்னால் நடந்த சம்பவங்களை வெளிப்படுத்தும் காட்சிகள், மறுபக்கம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை என இரண்டு தளங்களில் திரைக்கதை பயணிக்கிறது. நிகழ்வுகளை நேர்கோட்டில் சொல்லாமல், முன்னும் பின்னுமாக நகர்த்தும் நான்-லீனியர் திரைக்கதை பாணி தொடருக்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் புதிய தகவல்களை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் சந்தேகங்களை மாற்றிக்கொண்டே செல்வது சுவாரசியத்தை அதிகரிக்கிறது. சில திருப்பங்கள் எதிர்பாராத விதமாக அமைந்து ரசிக்க வைக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, குற்றம் சாட்டப்பட்டவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவருக்கான சட்ட உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தொடரின் அடிப்படையான நோக்கமாக இருக்கிறது. இந்தக் கருத்தை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ள பிரதீப் மரியான் மற்றும் பாலாஜி செல்வராஜின் முயற்சி வரவேற்கத்தக்கது.
கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கதையின் சூழலுக்கேற்ப அமைந்துள்ளது. நீதிமன்றக் காட்சிகளாக இருந்தாலும், கடந்தகால சம்பவங்களை விளக்கும் காட்சிகளாக இருந்தாலும் தேவையான காட்சியமைப்பை நேர்த்தியாக வழங்கியுள்ளார். விபின் பாஸ்கரின் பின்னணி இசை தொடரின் பரபரப்பை அதிகரிக்க உதவுகிறது. மோகன்ராஜ் எழுதியுள்ள பாடல்களும் அவற்றை இயக்குநர் பயன்படுத்தியுள்ள விதமும் ரசிக்க வைக்கின்றன. நான்-லீனியர் பாணியில் சொல்லப்படும் கதையை எந்தக் குழப்பமும் ஏற்படாத வகையில் தொகுத்திருப்பது ஆதீஸ்வரனின் முக்கியமான பங்களிப்பு.
அதேபோல், பாவனா கோவர்தனின் கலை இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள நீதிமன்ற அரங்கமும் கவனம் ஈர்க்கிறது. இந்தத் தொடரின் மற்றொரு சிறப்பம்சம் எபிசோடுகளின் நீளம். ஒவ்வொரு அத்தியாயமும் சுமார் 20 நிமிடங்களுக்குள் முடிவதால் தேவையற்ற இழுவை இல்லாமல் பார்க்க முடிகிறது. வசனங்களையும் திரைக்கதையையும் பிரதானமாக நம்பியிருக்கும் இதுபோன்ற தொடர்களுக்கு இந்த நேர அளவு பொருத்தமாக அமைந்துள்ளது. மேலும், தேவையற்ற ஆபாச வசனங்களையும் மிகையான கெட்ட வார்த்தைகளையும் தவிர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்தில் பலமான அம்சங்கள் இருந்தாலும், சில காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. குறிப்பாக, சுந்தரமூர்த்தியை பார் கவுன்சிலில் இருந்து நீக்கும் சம்பவம் பெரிய திருப்பமாகக் காட்டப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளிலேயே அதன் தீவிரம் குறைந்துவிடுகிறது. அதேபோல், சுந்தரமூர்த்திக்குப் பண ஆசை காட்டி வழக்கிலிருந்து விலகச் செய்ய முயற்சிக்கும் காட்சியும் திரைக்கதையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவை அத்தியாயங்களின் இறுதியில் பரபரப்பை உருவாக்குவதற்காக மட்டுமே சேர்க்கப்பட்ட உணர்வைத் தருகின்றன.
தயாரிப்புச் செலவின் கட்டுப்பாடுகளும் சில காட்சிகளில் வெளிப்படையாகத் தெரிகின்றன. கிறிஸ்துமஸ் ஊர்வலம், ரிசார்ட் பார்ட்டி, திருமண வரவேற்பு போன்ற இடங்களில் குறைவான எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் இடம்பெற்றிருப்பதால் அந்தக் காட்சிகள் எதிர்பார்த்த பிரம்மாண்டத்தைப் பெறவில்லை.
தொடரின் முக்கியமான குறையாகப் பார்வையாளர்களுக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான தொடர்பைக் குறிப்பிடலாம். கொலை செய்யப்பட்ட அதிகாரி மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்களும் பல்வேறு தவறுகளைச் செய்தவர்களாகக் காட்டப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற சட்டரீதியான கருத்தை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், அவர்களின் நிலையை நினைத்துப் பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்படும் தருணங்கள் குறைவாகவே உள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அப்பாவியாகவோ, அதிகாரம் படைத்தவர்களின் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட சாதாரண மனிதராகவோ இருந்திருந்தால், அவரது குடும்பத்தின் வழியாகக் கதைக்கு இன்னும் வலுவான உணர்வுபூர்வமான அடித்தளம் கிடைத்திருக்கலாம். அத்தகைய கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தால் சுந்தரமூர்த்தியின் நீதிக்கான போராட்டம் பார்வையாளர்களிடம் இன்னும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்படும் தருணத்திலேயே கதை ஒரு முழுமையான முடிவை எட்டிய உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகும் இரண்டு அத்தியாயங்கள் தொடர்வதால் அதுவரை இருந்த விறுவிறுப்பு சற்றுக் குறைகிறது. எழுத்து வடிவில் அந்தக் காட்சிகள் சுவாரசியமாக இருந்தாலும், திரையில் பார்க்கும்போது தேவையற்ற நீட்சியாகத் தோன்றுகின்றன. தீர்ப்பு வெளியான உடனேயே அடுத்த முக்கியமான திருப்பத்தையும் நீதிமன்றத்திலேயே இணைத்திருந்தால் கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக அமைந்திருக்கும். இந்தச் சிறிய மாற்றம் தொடரின் ஒட்டுமொத்த தாக்கத்தையும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
பெரிய அளவிலான ஆக்ஷன் காட்சிகளையோ பிரம்மாண்டமான தயாரிப்பையோ நம்பாமல், வலுவான கதையையும் வசனங்களையும் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கோர்ட் ரூம் கிரைம் திரில்லர் 'சட்டமும் நீதியும் 2'. சரவணனின் இயல்பான நடிப்பு, சுவாரசியமான நீதிமன்ற விசாரணைகள், நான்-லீனியர் திரைக்கதை, நேர்த்தியான படத்தொகுப்பு ஆகியவை தொடருக்குப் பலம் சேர்க்கின்றன. சில காட்சிகளில் தெரியும் பட்ஜெட் கட்டுப்பாடு, பார்வையாளர்களுடன் கதாபாத்திரங்களுக்கு ஏற்பட வேண்டிய உணர்வுபூர்வமான தொடர்பில் உள்ள குறை மற்றும் சற்று நீளமான இறுதிப் பகுதி ஆகியவை பலவீனங்களாக அமைந்துள்ளன.
இருப்பினும், ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவிட்டதாலேயே அவருக்கான சட்ட உரிமைகளைப் பறித்துவிட முடியாது என்பதையும், சமூகத்தின் தீர்ப்பைவிட நீதிமன்றத்தின் விசாரணையே முக்கியமானது என்பதையும் அழுத்தமாக எடுத்துச் சொல்லியிருப்பது தொடரின் வெற்றி. மொத்தத்தில், சட்டமும் நீதியும் 2 - சில திரைக்கதைக் குறைகள் இருந்தாலும், நீதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சுவாரசியமான கோர்ட் ரூம் திரில்லர்!