இந்த வியூகம் பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைப்பதற்கான நேரடி அஸ்திரமாகவே பார்க்கப்படுகிறது. இந்த உள்ளடி வேலைகளால் கொதிப்படைந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு விலாவாரியாக ஒரு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
மதுரை அரசியலில் எப்போதும் அனல் பறக்கும். இப்போது அந்த அனல், கட்சிக்கு வெளியிலிருந்து அல்ல, கட்சிக்கு உள்ளிருந்தே உள்ளடி வேலைகளாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஒருபுறம் உலகளாவிய பொருளாதார மேதையாக அறியப்படும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மறுபுறம் மதுரையின் தடாலடி அரசியல் முகமான மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி. இந்த இரு துருவங்களுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டி, இப்போது மதுரை மத்திய தொகுதியை ரணகளமாக்கிக் கொண்டிருக்கிறது.
மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் போட்டியிட பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விருப்ப மனு கொடுத்துள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக 20-க்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இது எதேச்சையாக நடந்ததல்ல. இதன் பின்னணியில் மாவட்டச் செயலாளர் தளபதியின் கைவரிசை இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீண்டும் வென்று அமைச்சரானால், அது தனது அரசியல் எதிர்காலத்திற்கும், அமைச்சர் கனவுக்கும் முட்டுக்கட்டையாக அமையும் என தளபதி கணக்குப் போடுவதாக உடன்பிறப்புகளே முணுமுணுக்கிறார்கள்.
23
தளபதியின் வாய்மொழி உத்தரவு
இந்த மோதல் வெறும் மனுக்களோடு நிற்கவில்லை. தேர்தல் வேலைகளிலும் விரிசல் விட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆருக்காக மகளிர் அணியினர் யாரும் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது என தளபதி தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவு பறந்திருக்கிறதாம். மாநகர மகளிர் அணி பொருளாளர் நூர்ஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள், தளபதி போட்டியிட விரும்பும் மதுரை வடக்கு தொகுதியில்தான் வேலை செய்ய வேண்டும் என கட்டாய உத்தரவு போடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த வியூகம் பி.டி.ஆரின் வெற்றியைச் சிதைப்பதற்கான நேரடி அஸ்திரமாகவே பார்க்கப்படுகிறது. இந்த உள்ளடி வேலைகளால் கொதிப்படைந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு விலாவாரியாக ஒரு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில், "மாவட்டச் செயலாளரின் இத்தகைய செயல்பாடுகளால் மதுரையே நம் கையை விட்டுப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என ஆவேசமாகத் தங்கள் குமுறல்களைக் கொட்டியுள்ளனர். மதுரையில் கோஷ்டி பூசல் முற்றிப்போய், அது கட்சியின் ஒட்டுமொத்த வெற்றியையும் பாதிக்கும் என்ற அச்சம் தலைமைக்குக் கடத்தப்பட்டுள்ளது.
33
சமாதானப் படலம்?
விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, திமுக தலைமை இரண்டு தரப்பையும் அழைத்துச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால், ஒருவர் அமைச்சர், இன்னொருவர் மாவட்டச் செயலாளர் என்பதால் யாரை விட்டுக் கொடுப்பது என்பதில் தலைமை திணறி வருகிறது.
மதுரையின் மாநகரத் தளபதி போடும் உள்ளடித் திட்டம் பி.டி.ஆரைச் வீழ்த்துமா? அல்லது பி.டி.ஆர் இதையெல்லாம் முறியடித்து மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிப்பாரா? தளபதியின் இந்த செக் ஆட்டம் திமுகவிற்கு மதுரையில் வெற்றியைத் தருமா? வேட்டு வைக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.