தமிழக அரசியலில் இதுவரை காணாத ஒரு வினோதமான, அதிரடியான திருப்பமாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான அரசியல் மோதல் இப்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. 'மாற்றம், முன்னேற்றம்' என்று முழங்கிய பாமக, இன்று ஒரு குடும்பப் போராகவும், கூட்டணிப் பேரம் பேசும் களமாகவும் மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலுக்குப் பிறகு, தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க டாக்டர் ராமதாஸ் முதலில் திமுக பக்கமே சாய்ந்தார். ஆனால், அங்கிருந்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், பாமகவை உள்ளே விடக்கூடாது என்பதில் இரும்புக்கரம் கொண்டு தடுத்தார். வேறு வழியின்றி, நடிகர் விஜய்யின் தவெக பக்கம் ராமதாஸ் பார்வை திரும்பியது. அங்கேயும் கதவுகள் திறக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் என்.டி.ஏ கூட்டணியையே சரணடைந்துள்ளார் "ஐயா".
25
'கிங் மேக்கர்' அந்தஸ்து சரிந்தது எப்படி?
1998-ல் பாமக எந்தப் பக்கம் இருக்கிறதோ, அந்தப் பக்கமே வெற்றி என்ற பிம்பம் இருந்தது. வன்னியர் வாக்கு வங்கியை வைத்து திராவிடக் கட்சிகளை மிரட்டிய காலம் அது. ஆனால், மாறி மாறி கூட்டணி வைத்தது, தேமுதிக போன்ற கட்சிகளின் எழுச்சி மற்றும் அன்புமணி மீதான ஊழல் புகார்கள் பாமகவின் செல்வாக்கை அதலபாதாளத்திற்குத் தள்ளியது. "அன்புமணி தன்னை மட்டுமே வளர்த்துக்கொண்டார்" என்ற ஆதங்கம் தொண்டர்கள் முதல் நிறுவனர் ராமதாஸ் வரை பரவியுள்ளது.
35
டெல்லி போட்ட ஸ்கெட்ச்
ராமதாஸ் திமுக பக்கம் சென்றால் அது என்.டி.ஏ கூட்டணிக்குச் சிக்கலாகிவிடும் என அமித் ஷா கணக்குப் போட்டார். இதனால், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேரடியாகக் களமிறங்கி, ராமதாஸின் மகள் காந்திமதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போதுதான் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ராமதாஸ். "நான் உயிராக வளர்த்த கட்சியை அன்புமணி அபகரித்துக் கொண்டார். நான் கூட்டணிக்கு வர வேண்டும் என்றால், நான் நிறுத்தும் வேட்பாளர்கள் மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்" எனக் கூறியுள்ளார். இது அன்புமணிக்கு வைக்கப்பட்ட நேரடி 'செக்' ஆகப் பார்க்கப்படுகிறது.
ராமதாஸின் கோரிக்கைகளில், ஜி.கே.மணி, காந்திமதி, அருள் உள்ளிட்ட 5 பேருக்கு சீட் வழங்க வேண்டும். தேர்தல் செலவுகளைக் கூட்டணித் தலைமை ஏற்க வேண்டும். மிக முக்கியமாக, சின்னம் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
தன்னிடம் இருந்து சின்னத்தைப் பறித்த மகனுக்கு எதிராக, அதே சின்னத்தை வைத்து அரசியல் செய்ய ராமதாஸ் துடிப்பது பாமக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல்களை பியூஸ் கோயல் அன்புமணியிடம் தெரிவிக்க, வேறு வழியின்றி அவரும் இதற்குச் சம்மதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கூட்டணிக்குள் குடுமிப்பிடி சண்டை
ஒருபுறம் பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, மறுபுறம் பாமகவுக்குள் தந்தை - மகன் மோதல் என என்.டி.ஏ கூட்டணி ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. இந்தக் குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைக்க ராமதாஸை உள்ளே வைத்திருப்பது அவசியம் என பாஜக கருதுகிறது.
55
2026-ல் உடையுமா மாம்பழம்?
டாக்டர் ராமதாஸின் இந்த பிடிவாதம் அன்புமணியின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கியுள்ளது. தனது சொந்த மகனுக்கே செக் வைக்கும் அளவிற்கு ராமதாஸ் துணிந்திருப்பது, பாமகவின் வாக்கு வங்கியை மேலும் சிதைக்குமா அல்லது பலப்படுத்துமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும். தமிழக அரசியலில் இது ஒரு மெகா சீரியல் திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.