
நாடு முழுவதும் 19.79 கோடி மின்சார நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய மின்துறை அமைச்சகம் ராஜ்ய சபாவில் தெரிவித்தது. மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் துறை திட்டத்தின் (RDSS) கீழ் இந்த பணிகள் நடக்கின்றன. இதுகுறித்து மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் 19.79 கோடி நுகர்வோருடன், 2.05 லட்சம் ஃபீடர்கள் மற்றும் 52.53 லட்சம் டிஸ்ட்ரிபியூஷன் டிரான்ஸ்ஃபார்மர்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு ஒப்புதல்
RDSS திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகளுக்காக மட்டும் ரூ.1.31 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகளுக்காக கூடுதலாக ரூ.1.53 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் 45 மின் விநியோக நிறுவனங்களில் இந்த டிஜிட்டல் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
2023 நிதியாண்டு முதல் RDSS திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.47,124 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், ரூ.2,733 கோடி ஸ்மார்ட் மீட்டர் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர்கள் மட்டுமல்லாமல், 394 நகரங்களில் ரூ.2,627 கோடி செலவில் SCADA மற்றும் விநியோக மேலாண்மை அமைப்புகளை நிறுவவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவன வள திட்டமிடல் (ERP), ஒருங்கிணைந்த பில்லிங் சிஸ்டம், புவியியல் தகவல் அமைப்பு சார்ந்த பணிகள் மற்றும் நிகழ்நேர தரவு சேகரிப்பு அமைப்புகள் போன்ற டிஜிட்டல் பணிகளுக்காக ரூ.3,999 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
7 நகரங்களில் ஸ்மார்ட் மின் விநியோகப் பணிகளுக்காக ரூ.8,608 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட் தொழில்நுட்ப அமைப்புகள், GIS துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்ஃபார்மர்களின் நிலையை கண்காணித்தல், மின்சாரக் கம்பிகளை பூமிக்கு அடியில் பதித்தல் மற்றும் விநியோக உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் போன்ற பணிகள் அடங்கும். நாட்டின் மின்சாரத் துறை முழுவதும் தரவுப் பரிமாற்றத்திற்காக ஒரு பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் 'இந்தியா எனர்ஜி ஸ்டாக்' என்ற புதிய முயற்சியையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
மின் விநியோக நிறுவன ஊழியர்களுக்கு டிஜிட்டல் அமைப்புகள் குறித்து பயிற்சி அளிக்க RDSS திட்டத்தின் கீழ் ரூ.100.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜூலை 2026 வரை ரூ.23.36 கோடி பயன்படுத்தப்பட்டு, 14,853 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. RDSS திட்டத்திற்கு முன்பு, ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தேசிய ஸ்மார்ட் கிரிட் மிஷன் போன்ற திட்டங்கள் மூலம் மின் விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு ஆதரவளித்தது.
சமீபத்தில் தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக வருவது குறித்து நுகர்வோரிடையே பல்வேறு புகார்கள் எழுந்தன. இதற்கு மின்சாரத் துறை தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், கணக்கீட்டு முறையில் உள்ள சிரமங்கள் நீடித்தன. இந்நிலையில்தான் மத்திய அரசின் இந்த ஸ்மார்ட் மீட்டர் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால், மின் பயன்பாடு நொடிக் கணக்கில் துல்லியமாகக் கணக்கிடப்படும். இதனால் தவறான அளவீடு, தாமதமான கணக்கெடுப்பால் ஸ்லாப் மாறுவது போன்ற பிரச்னைகள் முடிவுக்கு வந்து, கரண்ட் பில் எகிறும் என்ற கவலையே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.