
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024:
மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி (MVA) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் இன்று, நவம்பர் 23ஆம் தேதி வெளியாகின்றன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. 9.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
2024 மகாராஷ்டிரா தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?
பாஜக தலைமையிலான மஹாயுதி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் போட்டியிடும் அதே வேளையில், மஹாயுதி ஆட்சியை அகற்ற மஹா விகாஸ் அகாதி முயல்கிறது. மஹாயுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை உள்ளன. மஹா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT), மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (NCP-SP) ஆகியவை அடங்கும்.
மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள்:
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக 148 இடங்களிலும், சிவசேனா 80 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 53 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதற்கிடையில், மகா விகாஸ் அகாதி தரப்பில் காங்கிரஸ் 103 வேட்பாளர்களையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 89 வேட்பாளர்களையும், சரத் பவாரின் என்சிபி 87 வேட்பாளர்களையும் நிறுத்தியது. மீதமுள்ள இடங்கள் சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஏஐஎம்ஐஎம் (AIMIM) உள்ளிட்ட சிறிய கட்சிகளும் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுகின்றன. பகுஜன் சமாஜ் 237 வேட்பாளர்களையும் AIMIM 17 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.
மகாராஷ்டிரா தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்:
2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 4,100 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கிடையில், மும்பையின் 36 இடங்களில் 420 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, கோப்ரி-பச்பகாடியில் இருந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாகப் போட்டியிடுகிறார். பாராமதி தொகுதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தனது மருமகன் யுகேந்திர பவாரை (என்சிபி-எஸ்பி) எதிர்கொள்கிறார். நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் காங்கிரஸின் பிரஃபுல் குடாதேவை எதிர்த்து முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (பாஜக) கடும் போட்டியிடுகிறார்.
மகாராஷ்டிரா தேர்தல் கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பெரும்பான்மைக்கு 145 இடங்களில் வெற்றி தேவை.
JVC-TimesNow பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணிக்கு 159 இடங்களையும் மகாவிஸ் அகாதிக்கு 116 இடங்களையும் மற்றவர்களுக்கு 13 இடங்களையும் வழங்கியது. P-MARQ கருத்துக்கணிப்பு என்டிஏ கூட்டணிக்கு 137-157 இடங்களையும், இந்தியா கூட்டணிக்கு 126-146 இடங்களையும் மற்றவர்களுக்கு 2-8 இடங்களையும் வழங்கியது. போல் டைரி கருத்துக்கணிப்பு என்டிஏ கூட்டணி 122-186 இடங்களையும் எம்விஏ கூட்டணி 69-121 இடங்களையும் வெல்லும் என்று கணித்துள்ளது.
ஆனால், எலெக்டோரல் எட்ஜ் நடத்திய கருத்துக்கணிப்பில், எம்.வி.ஏ 150 இடங்களை வெல்லும் என்றும், பாஜக தலைமையிலான மஹாயுதிக்கு 121 இடங்கள்தான், மற்றவர்களுக்கு 20 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. லோக்ஷாஹி ருத்ரா மஹாயுதி மற்றும் எம்.வி.ஏ இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கணித்துள்ளது. மஹாயுதிக்கு 128-142 மற்றும் எம்விஏவுக்கு 125-140 இடங்களை வழங்கியுள்ளது. மற்றவர்களுக்கு 18-23 இடங்கள் கிடைக்கும் எனக் கணித்திருக்கிறது.
2019ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், பிரிக்கப்படாத சிவசேனா 56 இடங்களிலும், பிரிக்கப்படாத என்சிபி 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும், மற்றவை 16 இடங்களிலும் வெற்றி பெற்றன.