கேரள அரசியல் மேடையில் இந்த முறை யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்ற கேள்வி தேர்தல் முழுவதும் பேசுபொருளாக இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள Axis My India வெளியிட்ட எக்சிட் போல், அதிகார மாற்றத்தின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த கனிப்பின் படி, பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்துவரும் இரு முக்கிய கூட்டணிகளுக்கிடையேயான போட்டியில், UDF கூட்டணி தெளிவான முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிவிவர ரீதியாக பார்க்கும்போது, UDF கூட்டணிக்கு சுமார் 44 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தற்போது ஆட்சியில் உள்ள LDF கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணி 14 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. வாக்கு சதவீதத்தில் 5 சதவீத வித்தியாசம் இருப்பது, இந்த முறை ஆட்சிப் பரிமாற்றத்துக்கான வாய்ப்பை வலுப்படுத்துகிறது.
இந்த கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சம் வயது வாரியான வாக்காளர் நடத்தை பற்றிய ஆய்வாகும். குறிப்பாக இளம் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் தேர்தலை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. முதல்முறை வாக்களித்தவர்களில் 51 சதவீதம் பேர் UDF-க்கு ஆதரவளித்துள்ளனர். இது கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 13 சதவீதம் அதிகரிக்கும். இதேவேளை, LDF கூட்டணிக்கு இவ்வகை வாக்காளர்களிடமிருந்து ஆதரவு 13 சதவீதம் குறைந்துள்ளது.