வங்கக் கடலில் கோர தாண்டவம் ஆடும் 'அர்னாப்'... அக்.28-ல் கரையை தொடுகிறது அதிதீவிரப் புயல்; 5 மாநிலங்கள் திக் திக்!

Published : Oct 26, 2026, 07:52 PM IST

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘அர்னாப்’ புயல், அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று அக்.28 அன்று ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

PREV
15
வங்கக்கடலில் தீவிரமடையும் ‘அர்னாப் ’ புயல் - ராணுவம், பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் தீவிரமடைந்து ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் அக்.28 அன்று ஆந்திரக் கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை மையம் (IMD) திங்கள்கிழமை காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, புயலானது கிழக்கு-மத்திய அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதியில் காலை 5:30 மணி அளவில் நிலைகொண்டிருந்தது. இது விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 650 கி.மீ தொலைவில் மையம் கொண்டு, மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று நள்ளிரவுக்குள் இது தீவிரப் புயலாகவும் (Severe Cyclonic Storm), தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிதீவிரப் புயலாகவும் (Very Severe Cyclonic Storm) வலுப்பெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பின்னர் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே, ஏனாம் பகுதிக்கு மிக அருகில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

25
மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்

புயல் நெருங்கி வரும் சூழலில், பேரிடர் தயார்நிலையை ஆய்வு செய்யவும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் தேசிய இடர் மேலாண்மைக் குழுவின் (NCMC) கூட்டத்தை மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையில் நடத்தினார். கனமழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநில அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் (SDRF) களத்தில் இறக்கப்பட்டுள்ளன; கூடுதல் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவையும் மீட்பு நடவடிக்கைகளுக்காக முழு தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும், சொத்து சேதங்களைக் குறைக்கவும், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு சோமநாதன் உத்தரவிட்டார். சேவைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவற்றைச் சீரமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அக்டோபர் 26 முதல் 29 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் வானிலை மையம் ஆகியவை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

35
ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் துரித நடவடிக்கைகள்

ஆந்திரப் பிரதேச முதல்வர் நா. சந்திரபாபு நாயுடு, அனைத்துத் துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து கடலோர கிராம மக்களுக்குத் தொடர்ந்து எச்சரிக்கைகளை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகுகள் உடனடியாகக் கரைக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பிரசவ தேதி நெருங்கியுள்ள கர்ப்பிணிப் பெண்களை முன்கூட்டியே மருத்துவமனைகளுக்கு மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் 10 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன; நாடு முழுவதும் மேலும் 16 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மீட்புப் படையினரை நிறுத்தியுள்ளதுடன் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையை எச்சரித்துள்ளது. மின்தடை ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்வதற்காக அம்மாநில மின்துறை 25,000 மின் கம்பங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

ஒடிசாவில் கஞ்சம், கஜபதி, ராயகடா, மல்கான்கிரி, கோராபுட் மற்றும் நபரங்பூர் ஆகிய 6 தென் மாவட்டங்கள் புயலால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்னேற்பாடுகளைக் கண்காணிக்க முதல்வர் மோகன் சரண் மாஜி 8 அமைச்சர்களை நியமித்துள்ளார். என்.டி.ஆர்.எஃப், ஒடிசா பேரிடர் அதிரடிப் படை (ODRAF), தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த 6 மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

45
தமிழகத் துறைமுகங்களில் எச்சரிக்கைக் கூண்டு

புயலின் தாக்கம் கிழக்குக் கடற்கரை மாநிலங்களைத் தாண்டியும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 28 முதல் 30 வரை மேற்கு வங்கம் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு-மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா மற்றும் புருலியா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டார்ஜிலிங், கலிம்போங், அலிபுர்துவார் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது; டார்ஜிலிங் பகுதியில் நிலச்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி ஆகிய தென் வங்காள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். மேலும் ஜார்க்கண்ட், பிகார், கிழக்கு உத்தரப் பிரதேசம், விதர்பா மற்றும் கிழக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும். அந்தமான் தீவுகளிலும் அக்டோபர் 26 மற்றும் 27-ல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடல் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு துறைமுக அதிகாரிகள் மற்றும் கப்பல் இயக்குநர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

55
புயலுக்கு ‘அர்னப்’ என்று பெயர் வந்தது எப்படி?

இந்தப் புயலுக்கு ‘அர்னப்’ (Arnab) என்ற பெயரை வங்கதேசம் பரிந்துரைத்தது. உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஆசியா-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) இணைந்து உருவாக்கிய புயல் பெயர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.

வங்காள மொழியில் 'அர்னப்' என்பது கடல் அல்லது பெருங்கடலைக் குறிக்கும் சொல்லாகப் பரவலாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ பெயர் பட்டியலில் இதற்குப் பிரத்யேக விளக்கம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் வழங்கிய 169 பெயர்கள் அடங்கிய வரிசையிலிருந்து அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்கு வரிசைக் கிரமமாகப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. புயல்களை எளிதில் அடையாளம் காணவும், வானிலை எச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு குழப்பமின்றி கொண்டு சேர்க்கவும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories