Tirupati 121 Kg Gold Donation: திருமலை கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை; யார் இந்த வர்தமான் ஜெயின்?

Published : Nov 26, 2026, 05:04 PM IST

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.160 கோடி மதிப்புள்ள 121 கிலோ எடையிலான தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

PREV
15
திருமலை ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை

ஆந்திராவின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD), தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்கியுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றிலும், திருமலை கோவில் வரலாற்றிலும் தனிநபர் ஒருவரால் கோயிலுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடையாக இது கருதப்படுகிறது.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு முன்னிலையில் திருமலை கோவில் அதிகாரிகளிடம் இந்த 121 கிலோ தங்க ஆபரணங்கள் ஒப்படைக்கப்பட்டன. ஏழுமலையானை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அலங்கரிக்கும் வகையில் 9 செட்கள் மற்றும் 45 முதல் 47 வரையிலான பிரத்யேக ஆபரணங்களைக் கொண்ட இந்த நகைத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

25
15 மாத கால ஆலோசனையும் பிரத்யேக வடிவமைப்பும்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குத் தங்கம் நன்கொடை வழங்கும் விருப்பத்துடன், சுமார் 15 மாதங்களுக்கு முன்பு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி சி. வெங்கையா சௌத்ரியை அந்தப் பக்தர் அணுகியுள்ளார். தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் கருவூல அதிகாரிகளுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, ஆகம சாஸ்திர மரபுகள் மற்றும் தேவஸ்தான விதிமுறைகளுக்கு ஏற்ப மூலவரின் அன்றாட வழிபாடு மற்றும் விசேஷ அலங்காரங்களுக்காக அளவு எடுக்கப்பட்டு இந்த நகைகள் வடிவமைக்கப்பட்டன.

இந்த நகைத் தொகுப்பில் கிரீடம், சங்கு, சக்கரம், கை மற்றும் கால்கள், ஒட்டியாணம் (இடுப்பு அலங்காரம்), புஜகீர்த்திகள், அபய ஹஸ்தங்கள் மற்றும் பாத பீடங்கள் உள்ளிட்ட ஆபரணங்களும், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்குத் தங்கப் புடவையும் இடம்பெற்றுள்ளன. பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஆபரணங்கள், ரங்கநாதர் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டு அங்கிருந்து கோயிலுக்குள் கொண்டு சென்று வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியிலிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி வந்தார். அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்து வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை வழிபாடு செய்தார். பின்னர் நன்கொடையாளருடன் நகைகளைப் பார்வையிட்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்த அவர், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான டிக்கெட் வழங்கும் முறை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

35
நன்கொடை வழங்கியவர் யார்?

ஆரம்பத்தில் நன்கொடையாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரது பெயர் மற்றும் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிடாமல் இருந்தது. இருப்பினும், சென்னையைச் சேர்ந்த என்.ஆர்.ஐ. (NRI) பக்தரும், 'ஆக்சஸ் ஹெல்த்கேர்' (Access Healthcare) மற்றும் 'ஏசியா சென்னை இன்ஜினியரிங்' (Asia Chennai Engineering) நிறுவனங்களின் நிறுவனருமான வர்தமான் ஜெயின் (Vardhaman Jain) என்பவரே இந்த 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கியவர் எனக் கூறப்படுகிறது.

2025-ம் ஆண்டில் 'ஆக்சஸ் ஹெல்த்கேர்' நிறுவனத்தில் இருந்த 70% பங்குகளை, சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வர்தமான் ஜெயின் விற்பனை செய்தார். அதிலிருந்து ஒரு பகுதியைத் திருப்பதி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். வர்தமான் ஜெயின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏற்கெனவே பல்வேறு நன்கொடைகளை வழங்கியுள்ளார். 2025 ஜனவரி 19 அன்று ரூ. 6 கோடி நன்கொடை வழங்கினார். 2026 மே 16 அன்று தேவஸ்தானத்திற்கு மின்சாரப் பேருந்துகளை நன்கொடையாக அளித்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) மேம்பாட்டிற்காக ரூ. 7 கோடியும், தேவஸ்தானத்திற்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நாணயம் தரம் பிரிக்கும் இயந்திரத்தையும் அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

45
அயோத்தி ராமர் கோயில் சாதனையை விஞ்சிய நன்கொடை!

சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி திலீப் குமார் வி. லக்கி, அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கிய 101 கிலோ தங்க நன்கொடையை இந்த 121 கிலோ தங்க நன்கொடை விஞ்சியுள்ளதாக தேவஸ்தான அதிகாரி வெங்கையா சௌத்ரி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் மூலவரை அலங்கரிப்பதற்காக ஏற்கெனவே சுமார் 650 கிலோ எடையுள்ள ஆபரணங்கள் உள்ளன; அவற்றின் மதிப்பு ரூ. 6,000 கோடிக்கும் அதிகமாகும்.

அவற்றில் பதிக்கப்பட்டுள்ள வைரங்கள், ரத்தினங்கள் மற்றும் மாணிக்கங்களையும் சேர்த்தால் அவற்றின் மதிப்பு ரூ. 10,000 கோடியாக மதிப்பிடப்படுகிறது. மேலும், பக்தர்களின் காணிக்கைகளால் திரட்டப்பட்ட 11 டன்னுக்கும் அதிகமான தங்க இருப்பு தேவஸ்தானத்திடம் உள்ளது. திருமலை கோயிலுக்கு மாதந்தோறும் ரூ. 120 கோடி முதல் ரூ. 140 கோடி வரை ரொக்கக் காணிக்கையும், சுமார் 100 முதல் 120 கிலோ வரை தங்கமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

55
திருமலை கோயில் வரலாற்றில் இடம்பெற்ற முக்கிய நன்கொடைகள்

புராணக் கதைகளின்படி, சீனிவாசப் பெருமாளுக்கு அவரது மாமனாரான ஆகாச ராஜு முதலில் ஒரு தங்கக் கிரீடம் வழங்கினார். அதன்பின் 12-ம் நூற்றாண்டு முதல் பல்வேறு மன்னர்கள் காலத்தில் பெருமளவில் தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வட ஆற்காடு கலெக்டராகப் பணியாற்றிய தாமஸ் மன்றோ, ஒரு பெரிய கங்காளம் (உண்டியல் அண்டா) பரிசளித்தார். மேலும், வரலாற்றில் பல்வேறு காலக்கட்டங்களில் வழங்கப்பட்ட முக்கிய நன்கொடைகள்: முகலாயப் பேரரசர்கள் அக்பர் மற்றும் ஜஹாங்கிரின் முத்திரைகள் பொறிக்கப்பட்ட 500 நாணயங்கள் கொண்ட மாலை மற்றும் ஜார்ஜ் மன்னர், விக்டோரியா மகாராணியின் உருவங்கள் பொறிக்கப்பட்ட 492 நாணயங்கள் கொண்ட காசு மாலைகள்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹேட்சரீஸ் வழங்கிய 13 கிலோ கிரீடம் மற்றும் சஞ்சீவ் கோயங்கா வழங்கிய 10 கிலோ தங்கக் கிரீடங்கள் (மேலும் கடந்த ஆண்டு மே மாதம் தங்கக் கத்தி மற்றும் வரத ஹஸ்தம்). குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் ஹுசைன் சாஹேப் மற்றும் 2003-ல் லலிதா ஜூவல்லரி தலைவர் கிரண் ஆகியோர் வழங்கிய 108 தங்கத் தாமரை மலர்கள். ரத்தினக்கல் பதித்த 7 கிலோ மாலை, லலித் பாசின் வழங்கிய தங்கக் கங்காளம் மற்றும் பாத்திரங்கள், முன்னாள் எம்.பி. மேகபதி ராஜமேகன் ரெட்டி வழங்கிய 20 கிலோ தங்க பீதாம்பரங்கள். 2009-ல் கர்நாடகத் தொழிலதிபர் காளி ஜனார்த்தன ரெட்டி வழங்கிய ரூ. 42 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். அரசு சார்பில் வழங்கிய ரூ. 5.2 கோடி மதிப்புள்ள 19.072 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர் ராமலிங்க ராஜுவின் நன்கொடையில் ரூ. 11 கோடியில் செய்யப்பட்ட சகஸ்ரநாம தங்கக் காசு மாலை. 2021-ல் எம்&சி பிராப்பர்டீஸ் வழங்கிய 3.604 கிலோ தங்கக் கட்டிகள், ஒரு தீவிர பக்தர் வழங்கிய 5.3 கிலோ தங்கக் கத்தி மற்றும் வரத ஹஸ்தம், மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கதுரை வழங்கிய பல்வேறு தங்க ஆபரணங்கள். இருப்பினும், ஏழுமலையான் கோயில் வரலாற்றில் ஒரே நேரத்தில், ஒரே பக்தரிடமிருந்து 121 கிலோ எடையுள்ள ஆபரணத் தொகுப்பு காணிக்கையாக வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories