பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. செம்மர கடத்தல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தன்னுடைய தோற்றத்தை மாற்றி நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெளியான அனைத்து பாடல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சமந்தா ஆடிய ஐட்டம் பாடலுக்கு ரசிகர்கள் கட்டவுட் வைத்து கொண்டாடும் அளவுக்கு தங்களுடைய ஏகோபித்த வரவேற்பை கொடுத்தனர். குறிப்பாக 'சாமி' பாடலில், கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் ஆடிய நாயகி ராஷ்மிகாவின் நடனத்தை விட, ஓ சொல்றியா மாமா... பாடல் தான் பலரையும் கவர்ந்து இழுத்தது.
மேலும் செய்திகள்: சூர்யா - ஜோதிகா பிஃட்னஸுக்கு காரணம் இவர் தானா? ட்ரைனருடன் ஜோடியாக கொடுத்த கூல் போஸ்..!
அதே நேரத்தில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்... ஆண்களை இழிவு படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி சில சர்ச்சைகள் எழுந்த நிலையில், பின்னர் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
அதே நேரத்தில், முதல் பாகத்தில் இடம்பெற்றது போலவே இரண்டாவது பாகத்திலும், ஒரு ஐட்டம் பாடலை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் திரை உலகை சேர்ந்த முன்னணி நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வாய்ப்பை மலேகா அரோரா கைப்பற்றியுள்ளார். எனினும் சமந்தாவின் இடத்தை மலேகா அரோரா நிரப்புவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் 'புஷ்பா 2' இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு விரைவில் ஆரம்பமாகி, அடுத்த ஆண்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 400 கோடி வசூல் சாதனை படைத்தாலும், தொடர்ந்து கலவையான விமர்சனங்களே கிடைத்ததால், இரண்டாம் பாகத்தை கூடுதல் கவனம் செலுத்தி இயக்குனர் சுகுமார் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.