தொழில் முனைவோராக ஜொலிக்க ஒரு அருமையான வாய்ப்பு! தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் வரும் ஏப்ரல் 28, 2025 முதல் ஏப்ரல் 30, 2025 வரை 3 நாட்கள் முற்றிலும் இலவச ட்ரோன் பயிற்சி திட்டத்தை வழங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி, புதிய தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்க உள்ளது.
இந்த பயிற்சி திட்டத்தில் ட்ரோன்களின் அடிப்படைகள், ட்ரோன் விதிமுறைகள் பற்றிய கண்ணோட்டம், ட்ரோன்களின் வகைகள் மற்றும் செயல்பாடுகள், பராமரிப்பு, அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சிமுலேட்டர் மற்றும் நேரடி களப் பயிற்சி, ட்ரோன் பாகங்களை இணைப்பது மற்றும் பிரிப்பது, விமான கட்டுப்பாட்டு சென்சார் அளவுத்திருத்தம், கண்காணிப்பு மற்றும் மேப்பிங் ஒருங்கிணைப்பு, ACT மற்றும் ரேடியோ டெலிபோனிக் போன்ற முக்கியமான விஷயங்கள் கற்றுத்தரப்படும். அதுமட்டுமின்றி, அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் விரிவாக விளக்கப்பட உள்ளது.
யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தொழில் முனைவதில் ஆர்வம் உள்ள ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் வசதியும் உள்ளது. தேவைப்படுவோர் விண்ணப்பித்து இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: 12-ஆம் வகுப்பு தகுதிக்கு ₹49,623 சம்பளத்தில் அரசு வேலை! உடனே விண்ணப்பிக்கவும்!
மேலும் தகவல்கள் வேண்டுமா?
இந்த பயிற்சி பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 2 இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 9360221280 / 9543773337.