
பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்படுகிறார்கள். இப்படிப்பட்ட திறமையான இளைஞர்களுக்கு உதவும் வகையில் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2025-26 கல்வி ஆண்டுக்கான இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) மாணவர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், ரூ.6 லட்சம் வரை நிதி உதவி பெற முடியும்.
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மாணவர்களில் 5,000 பேரை தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுத்து இந்த உதவித்தொகையை வழங்குகிறது. இதன் மூலம், நிதிப் பிரச்சினைகளால் மாணவர்களின் கல்வி தடைபடாமல், அவர்களின் கனவுகளை நனவாக்க ரிலையன்ஸ் உதவுகிறது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.15 லட்சத்திற்கு குறைவாக உள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 2025-26 கல்வி ஆண்டில் முதல் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தின் கீழ், பட்டம் முடியும் வரை ரூ.2 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும்.
விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்: இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025-26 கல்வி ஆண்டில் முழு நேரப் பட்டப்படிப்பில் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ரூ.15 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்: 2-வது அல்லது 3-வது ஆண்டு படிக்கும் மாணவர்கள் தகுதியற்றவர்கள். தொலைதூரக் கல்வி, ஆன்லைன், பகுதி நேரப் படிப்புகளில் சேருபவர்கள் விண்ணப்பிக்க முடியாது. 12-ஆம் வகுப்புக்குப் பதிலாக டிப்ளமோ முடித்தவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும் இந்த உதவித்தொகைக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஒரு திறனாய்வுத் தேர்வு (Aptitude Test) நடத்தப்படும். இதில், வாய்மொழித் திறன், பகுப்பாய்வு மற்றும் தர்க்கத் திறன், எண் திறன் ஆகிய தலைப்புகளில் இருந்து 60 நிமிடங்களில் 60 பல்தேர்வு வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதில் பெறும் மதிப்பெண்கள், கல்வித் தகுதிகள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் அடிப்படையில் 5,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எதிர்காலத்தில் அதிக தேவை உள்ள பாடப்பிரிவுகளில் முதுகலை படிக்கும் 100 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பொறியியல், உயிரியல், செயற்கை நுண்ணறிவு (AI), கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற துறைகளில் முதுகலை படிக்கும் மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, முதுகலை படிப்பு முடியும் வரை ரூ.6 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும். இளங்கலை உதவித்தொகையை விட, முதுகலை உதவித்தொகைக்கான தேர்வு முறை சற்று கடினமானது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்காணலும் நடத்தப்படும்.
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கும் UG மற்றும் PG உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4, 2025. தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், 7977100100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு செய்தி அனுப்பலாம். அல்லது (011) 41171414 என்ற ஹெல்ப் லைன் எண்ணை அழைக்கலாம்.