சிறு வயதில் வானத்தைப் பார்த்து வியக்காத குழந்தைகளே இருக்க முடியாது. "நானும் ஒரு நாள் விண்வெளிக்கு போவேன்," என்று சொல்லும் மாணவர்களின் கனவை நனவாக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒரு சூப்பரான திட்டத்தை அறிவித்துள்ளது. அதுதான் 'யுவிகா 2026' (YUVIKA - Young Scientist Programme). ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு வார இலவச உறைவிடப் பயிற்சி முகாம், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகும்.
"Catch them young" அதாவது இளம் வயதிலேயே திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த துறைகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக இஸ்ரோ இந்த திட்டத்தை 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த முகாமில் மாணவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடலாம், விண்வெளி ஆய்வகங்களைப் பார்வையிடலாம் மற்றும் பல செய்முறைப் பயிற்சிகளில் ஈடுபடலாம்.