
இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT) சேர வேண்டும் என்பது பல மாணவர்களின் கனவாக இருக்கும். பொதுவாக, ஐஐடி-யில் சேரக் கடுமையான ஜெஇஇ மெயின் (JEE Main) மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் இல்லாமலேயே ஐஐடி-யில் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பப் பாடங்களை ஐஐடி-கள் குறுகிய கால மற்றும் சான்றிதழ் படிப்புகளாக வழங்குகின்றன.
அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு மிகவும் அவசியமான கணிதப் பாடத்தை ஐஐடி காரக்பூர் வழங்குகிறது. பேராசிரியர் ஜிதேந்திர குமார் நடத்தும் இந்தத் தனிப்பட்ட வேகத்தில் கற்கும் (Self-paced) பாடத்திட்டத்தில், டிஃபரன்ஷியல் கால்குலஸ், லீனியர் அல்ஜீப்ரா போன்ற முக்கியக் கணிதக் கோட்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன. ஸ்வயம் (Swayam) தளம் மூலம் வழங்கப்படும் இந்தப் படிப்பிற்கு onlinecourses.swayam2.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம்.
உயிரியல் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஐஐடி குவஹாத்தி ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. டாக்டர் உத்பல் போரா நடத்தும் 'ஜெனடிக் இன்ஜினியரிங் அண்ட் அப்ளிகேஷன்ஸ்' (Genetic Engineering and Applications) என்ற படிப்பு, மூலக்கூறு உயிரியல் நுட்பங்கள், குளோனிங் மற்றும் ஜீன் தெரபி பற்றி விரிவாகக் கற்றுத்தருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் லைஃப் சயின்ஸ் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். nptel.ac.in தளத்தில் இது குறித்த தகவல்கள் உள்ளன.
ஐஐடி மெட்ராஸ், பயோடெக்னாலஜி மாணவர்களுக்காகத் பிரத்யேகமாக 'தெர்மோடைனமிக்ஸ்' (Thermodynamics) என்ற பாடத்தை வழங்குகிறது. பேராசிரியர் ஜி.கே. சுரேஷ்குமார் நடத்தும் இந்தப் படிப்பில், வெப்ப இயக்கவியலின் விதிகள் மற்றும் ஆற்றல் மாற்றங்கள் குறித்துக் கற்றுக்கொள்ளலாம். என்.பி.டி.இ.எல் (NPTEL) தளம் மூலம் வழங்கப்படும் இந்தப் படிப்பு, மாணவர்களுக்குத் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை வழங்குகிறது.
பணிபுரியும் வல்லுநர்களுக்காக ஐஐடி டெல்லி, ரோபோட்டிக்ஸ் துறையில் எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் (Executive Programme in Robotics) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 மாதங்கள் கொண்ட இந்த ஆன்லைன் படிப்புக்கு மார்ச் 14 முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. ஏஐ (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) சார்ந்த ரோபோட்டிக்ஸ் நுட்பங்களைக் கற்றுத்தரும் இந்தப் படிப்பிற்கு, 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ.1,69,000 ஆகும்.
கணினி அறிவியல் மற்றும் மென்பொருள் துறையில் நுழைய விரும்புபவர்களுக்காக ஐஐடி பாம்பே, பைதான் (Python 3.4.3) மொழியைக் கற்றுத்தருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் பட்டதாரிகள் வரை யார் வேண்டுமானாலும் ஸ்வயம் தளம் மூலம் இந்தப் படிப்பில் சேரலாம். மென்பொருள் மேம்பாடு மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் வேலைவாய்ப்பைப் பெற இந்தப் படிப்பு பெரிதும் உதவும்.