அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் விசா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய புகலிடமாக மாறியுள்ளது. ரஷ்யாவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிப்பது ஏன்?
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற பாரம்பரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு இடங்கள் இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில், ரஷ்யா ஒரு புதிய ஈர்ப்பு மையமாக உருவெடுத்துள்ளது. ரஷ்யாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, கட்டுமானத் துறையிலிருந்து இயந்திரவியல் தொழிற்சாலைகள் வரை பல்வேறு துறைகளில் இந்தியத் திறமையாளர்களை ரஷ்ய நிறுவனங்கள் ஈர்த்து வருகின்றன.
25
தேவை அதிகரிப்பதற்கான காரணங்கள்
ரஷ்யாவிற்கான இந்தியத் தூதர் வினய் குமார், இந்திய நிபுணர்களுக்கான தேவை சமீப மாதங்களாக அதிகரித்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 2030-க்குள் சுமார் 3.1 மில்லியன் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று ரஷ்ய தொழிலாளர் அமைச்சகம் கணித்துள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டை 2025-ம் ஆண்டில் 1.5 மடங்கு அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 230,000 தகுதியுள்ள நிபுணர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
35
பலதுறை வேலைவாய்ப்புகள் மற்றும் புதிய வசதிகள்
ஆரம்பத்தில், கட்டுமான மற்றும் ஜவுளித் துறைகளில் பெரும்பாலான இந்தியத் தொழிலாளர்கள் பணிக்குச் சேர்ந்தனர். ஆனால் இப்போது, இந்தத் தேவை அதிநவீன துறைகளான கனரக இயந்திரங்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறைகளுக்கும் விரிவடைந்து வருகிறது. இது, திறமையான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இந்த வருகையைச் சமாளிக்க, ரஷ்யாவின் எகாடெரின்பர்க் நகரில் ஒரு புதிய இந்தியத் துணைத் தூதரகம் திறக்கப்படவுள்ளது.
ரஷ்யா, குறுகிய மற்றும் நீண்ட கால வேலைகளுக்காக ஒற்றை அல்லது பலமுறை நுழைவு விசா, மற்றும் உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களுக்கான (HQS) விசா எனப் பலவகையான விசாக்களை வழங்குகிறது. இருப்பினும், வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்தும் இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடைத்தரகர்கள் சுற்றுலா அல்லது வணிக விசாவில் தொழிலாளர்களை ரஷ்யாவிற்குள் நுழைய முயற்சிக்கின்றனர். இதுபோன்ற விசாக்கள் மூலம் சட்டப்பூர்வமாக வேலை செய்ய முடியாது, மேலும் அவற்றை வேலை விசாவாக மாற்ற முடியாது என்றும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, வேலைவாய்ப்புகளை உறுதி செய்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
55
மாணவர்கள் மற்றும் நிபுணர்களின் வருகை
தற்போது, சுமார் 14,000 இந்தியர்கள் ரஷ்யாவில் வசித்து வருகின்றனர். இதில் 4,500-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர். அவர்களில் சுமார் 90% பேர் மருத்துவப் படிப்பு மேற்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் பொறியியல், கணினி அறிவியல், வேளாண்மை போன்ற துறைகளில் படிக்கின்றனர். இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் இந்த வருகை, ரஷ்யாவில் உள்ள இந்தியச் சமூகத்தை மேலும் விரிவடையச் செய்துள்ளது.