
நமது நாட்டில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது. பெரு நகரங்களின் டிராபிக்கில் கார் ஓட்ட அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களே திணறும்போது புதிதாக கார் ஓட்டுபவர்களின் நிலையை சொல்லவே வேண்டாம்.
புதிதாக கார் ஓட்டப் பழகுபவர்களுக்கு டிராபிக்கில் க்ளட்ச் மற்றும் கியரை ஒரே நேரத்தில் கையாள்வது சற்று பதற்றத்தை ஏற்படுத்தும். இந்த சிக்கலை தீர்க்கவே 'ஆட்டோமேட்டிக் கார்கள்' (Automatic Cars) சந்தையில் உலா வருகின்றன. அந்த வகையில் புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் டாப் 5 ஆட்டோமேட்டிக் கார்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் நடுத்தர குடும்பங்களின் எவர்கிரீன் தேர்வாக ஆல்டோ உள்ளது. இந்த காரின் சிறிய வடிவமைப்பு, குறுகலான சந்து மற்றும் கடுமையான டிராஃபிக்கிலும் எளிதாக திருப்பி ஓட்ட உதவுகிறது. இதில் AGS (Auto Gear Shift) வசதி உள்ளது. முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கும், ஓட்டப் பழகுபவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த காராக இது இருக்கும்.
இந்த கார் 1 லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 24.90 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலை ரூ.5.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த மாடலில் டூயல் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் (ABS with EBD) போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
புதிய கார் ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் அதிக மைலேஜ் மற்றும் பட்ஜெட் விலை என இரண்டிலும் அடங்கிய கார் மாருதி சுசுகி செலேரியோ ஆகும். ஆல்டோவை விட சற்று கூடுதல் இடவசதி கொண்ட காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சரியான தேர்வாகும்.
இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (Hill Hold Assist) மேடான சாலைகளில் காரை நிறுத்தி எடுக்கும்போது பின்னோக்கி உருளாமல் தடுக்கும் என்பதால் புதிய ஓட்டுநர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். 1 லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 26.68 கி.மீ மைலேஜ் கொடுக்கும் இந்த கார் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார்களில் ஒன்றாகும். இந்த காரின் விலை ரூ.6.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
குறைந்த விலையில் ஒரு மினி எஸ்யூவி போன்ற கம்பீரமான தோற்றத்தை விரும்புபவர்களின் தேர்வு ரெனால்ட் க்விட் ஆகும். இதன் கியர் மாற்றும் முறை மற்ற கார்களைப் போல லிவர் இல்லாமல், டேஷ்போர்டில் உள்ள ரோட்டரி டயல் (Rotary Dial) மூலம் இயங்குவதால் புதிய ஓட்டுநர்களுக்கு எளிதாக இருக்கும். இந்த மாடல் சுமார் 22.30 கி.மீ மைலேஜ் கொடுக்கும்.
இந்த காரில் Transmission Type Easy-R AMT ஆக உள்ளது. 184 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், கரடுமுரடான மற்றும் வேகத்தடிகள் நிறைந்த சாலைகளில் காரின் அடிப்பகுதி இடிக்காமல் தப்பலாம். காரை ரிவர்ஸ் எடுப்பது பெரும் சவால். இதில் உள்ள ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா புதிதாக ஓட்டிப் பழகுபவர்களுக்கு கை கொடுக்கும். இந்த காரின் விலை ரூ.5.44 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
இந்தியாவின் "டால் பாய்" என்று அழைக்கப்படும் வேகன் ஆர், குடும்பத்துடன் பயணிக்க மிகவும் உகந்தது. இதன் உயரமான வடிவமைப்பு காரணமாக, காரின் உள்ளே ஏறி, இறங்குவது மிகவும் எளிது. மேலும், சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் ஓட்டுநரின் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும்.
இந்த கார் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 25.19 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. இந்த காரின் பெரிய விண்ட்ஷீல்ட் மற்றும் உயரமான சீட்டிங் பொசிஷன், புதிய ஓட்டுநர்களுக்கு காரின் நான்கு மூலைகளையும் கணித்து ஓட்ட உதவும் இந்த காரின் விலை ரூ.6.55 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மைலேஜ், விலையுடன் சேர்த்து பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களின் முதல் தேர்வாக டாடா டியாகோ மாடல் உள்ளது. குளோபல் என்கேப் விபத்து பரிசோதனையில் 4-ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்த கார், இந்திய சாலைகளுக்கு மிகவும் உறுதியானது. இதில் Transmission Type 5 Speed AMT வசதி உள்ளது.
இந்த மாடல் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 20 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது. இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ல கார்னரிங் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் வளைவுகளில் காரைத் திருப்பும்போது கார் கட்டுப்பாட்டை இழக்காமல் நிலையாகச் செல்ல உதவுகிறது. இந்த காரின் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.