இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி சிறந்த வாகன வரிசையை கொண்டுள்ளது. வளர்ந்து வரும் எஸ்யூவி சந்தையில், பல பிரிவுகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதே நிறுவனத்தின் இலக்கு. 2025-ல் சாலைகளில் வரவிருக்கும் மூன்று மாருதி எஸ்யூவிகளின் முழு விவரங்களை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
மாருதி எலக்ட்ரிக் விட்டாரா
மாருதி இ-விட்டாரா 2025 மார்ச்சில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஹார்டெக்ட்-இ பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி 49kWh மற்றும் 62kWh என இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வழங்கப்படும். இவை இரண்டும் 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் திறன் கொண்டவை. இரண்டு பேட்டரிகளும் முன் ஆக்சில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைக்கப்படும். இது முறையே 143bhp மற்றும் 173bhp ஆற்றலை வெளிப்படுத்தும். நாட்டில் உள்ள 100 நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில் மாருதி சுசுகி ஃபாஸ்ட் சார்ஜர்களை நிறுவுகிறது. மேலும் 1,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,500-க்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சேவை மையங்களையும் நிறுவுகிறது. இந்த மின்சார காருக்காக மாருதி சுசுகி ஒரு பிரத்யேக சார்ஜிங் செயலியை அறிமுகப்படுத்தும்.