
இந்தியாவில் கார் வாங்கும்போது, 'மேனுவல் கியர்பாக்ஸ்' நல்லதா அல்லது 'ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்' நல்லதா என்ற குழப்பம் எல்லோருக்கும் வரும். டெக்னாலஜி வளர்ந்து, புது கார்களில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள் மலிவாகக் கிடைத்தாலும், இந்தியர்களின் முதல் சாய்ஸ் மேனுவல் கார்கள்தான்!.
சமீபத்தில் 'Cars24' மற்றும் 'டீம்-பிஹெச்பி' இணைந்து வெளியிட்ட 'கியர்ஸ் ஆஃப் க்ரோத் 2025' (Gears of Growth 2025) அறிக்கை, யூஸ்டு கார் மார்க்கெட்டில் இன்றும் மேனுவல் கார்கள்தான் கெத்து காட்டுகின்றன என்று சொல்கிறது.
இந்த அறிக்கைப்படி, இந்தியாவின் யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனை விகிதம் இப்படி இருக்கிறது. மேனுவல் கார்கள்: 72% ஆட்டோமேட்டிக் கார்கள்: 28% அதாவது, நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு 3 மேனுவல் கார்களுக்கும், 1 ஆட்டோமேட்டிக் கார் மட்டுமே விற்கப்படுகிறது. ஆனால், இந்த புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.
வயது அடிப்படையில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆட்டோமேட்டிக் கார்களை அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்றும் மேனுவல் கார்களையே வாங்க நினைக்கிறார்கள். 35-45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறார்கள். பாலின அடிப்படையில் பெண் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு சராசரியை விட அதிக டிமாண்ட் உள்ளது.
ஆண்கள் மேனுவல் கார்களை விரும்பினாலும், சமீபகாலமாக அவர்களிடமும் ஆட்டோமேட்டிக் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. : பெங்களூரு, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், கடுமையான டிராஃபிக் நெரிசல் காரணமாக ஆட்டோமேட்டிக் கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், மற்ற நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மேனுவல் கார்கள்தான் ஃபேவரைட்.
இந்திய மார்க்கெட்டில் மேனுவல் கார்கள் முன்னணியில் இருக்க மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1. குறைந்த செலவு: மேனுவல் கார்கள் வாங்கும்போது விலை குறைவு. நல்ல மைலேஜ் தருவதோடு, அவற்றின் ரிப்பேர் செலவும் மிகக் குறைவு.
2. ஓட்டும் பழக்கம்: பெரும்பாலான இந்தியர்கள் மேனுவல் கார்களில்தான் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், முதல்முறை செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போதும், பழகிய மேனுவல் காரையே தேர்வு செய்கிறார்கள்.
3. சிறந்த ரீசேல் வேல்யூ: மேனுவல் கார்களுக்கு நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் இருப்பதால், காரை விற்கும்போது எளிதாகவும் நல்ல விலைக்கும் விற்க முடிகிறது. கிராமப்புற மற்றும் சிறிய நகரங்களில் Maruti Swift Dzire, Wagon R, Hyundai i10, Grand i10, மற்றும் Maruti Alto மேனுவல் கார்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. அதேபோல, மெட்ரோக்களில் Maruti Baleno மற்றும் Honda City ஆட்டோமேட்டிக் கார்கள் அதிகம் விற்பனையாகின்றன.
பெங்களூரு, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் தினமும் வேலைக்குச் செல்பவர்களுக்கு, டிராஃபிக்கில் கிளட்ச்சை மிதித்து கால் வலி வருவது எரிச்சலைத் தரும். எனவே, ஓட்டுவதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக (Driving Convenience) மக்கள் ஆட்டோமேட்டிக் கார்கள் பக்கம் திரும்புகின்றனர். இளைஞர்கள் சந்தைக்குள் வருவதால், ஆட்டோமேட்டிக் கார்களின் தேவை 28% இலிருந்து மேலும் அதிகரிக்கும் அறிகுறிகள் தெரிகின்றன.
மேனுவல் காரின் கியர்பாக்ஸ் தொழில்நுட்ப ரீதியாக எளிமையானது, ரிப்பேர் செலவும் குறைவு. ஆனால் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (AMT, CVT, Torque Converter, Dual-Clutch) சிக்கலான தொழில்நுட்பம் கொண்டது. ஒருமுறை பழுதாகிவிட்டால், அதன் ரிப்பேர் செலவு மிக அதிகமாக இருக்கும்.
ஆட்டோமேட்டிக் தேர்வு: உங்கள் தினசரி பயணம் பெரும்பாலும் பெங்களூரு போன்ற பெரிய நகரங்களின் டிராஃபிக்கில் இருந்தால், ஆட்டோமேட்டிக் கார் தரும் சொகுசான பயணத்திற்காகக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் செலவழிப்பது மதிப்புக்குரியது.
மேனுவல் தேர்வு: உங்கள் பயணம் பெரும்பாலும் ஹைவேக்களில் இருந்தால், நீங்கள் சிறிய நகரங்களில் வசித்தால், குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் அதிக மைலேஜ் தேவைப்பட்டால், 'மேனுவல் கார்' உங்களுக்குச் சிறந்த தேர்வாக இருக்கும்!