
இந்தியாவில் தினசரி பயன்பாட்டிற்கான ஸ்கூட்டர்கள் என்றாலே மக்கள் மனதில் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரே பெயர் 'ஹோண்டா ஆக்டிவா'. பல ஆண்டுகளாக இந்தியக் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்த பிராண்டில், தற்போது சந்தையில் 2 முக்கிய மாடல்கள் முன்னணி தேர்வுகளாக உள்ளன: ஒன்று ஹோண்டா ஆக்டிவா 6G, மற்றொன்று ஹோண்டா ஆக்டிவா 125.
கோடிக்கணக்கான வீடுகளில் 110சிசி ஸ்கூட்டராக முதன்மை இடம்பிடித்துள்ள ஆக்டிவா 6G ஒருபுறமிருக்க, சற்றே பெரிய வடிவம் மற்றும் அதிக பவருடன் ஆக்டிவா 125 மறுபுறம் களமிறங்குகிறது. இவை இரண்டிற்கும் இடையிலான தேர்வு என்பது வெறும் வேகத்தைப் பற்றியது மட்டுமல்ல; உங்கள் அன்றாடப் பயன்பாடு, பட்ஜெட் மற்றும் சவாரி வசதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரண்டு மாடல்களின் சிறப்பம்சங்கள், விலைகள் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் குறித்த விரிவாக பார்ப்போம்.
ஹோண்டா ஆக்டிவா வரிசை தொடர்ந்து இந்தியாவின் விருப்பமான குடும்ப ஸ்கூட்டராக இருப்பதற்கு அதன் நீடித்து உழைக்கும் 'மெட்டல் பாடி' (Metal Body) வடிவமைப்பு முக்கியக் காரணம். காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை ஏற்றிச் செல்வது, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது முதல் நெரிசலான டிராஃபிக்கில் பயணிப்பது வரை அனைத்துத் தேவைகளையும் இவை பூர்த்தி செய்கின்றன.
ஆக்டிவா 6G: தூய்மையான எளிமை மற்றும் அதிக மைலேஜை முதன்மையாகக் கொண்டது. எடை குறைவாக இருப்பதால் அனைத்து வயதினரும் மிக எளிதாக பேலன்ஸ் செய்து ஓட்ட முடியும்.
ஆக்டிவா 125: சாலையில் கம்பீரமான தோற்றத்தை (Road presence) விரும்புபவர்கள் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்ற நவீன தொழில்நுட்பங்களை எதிர்பார்ப்பவர்களுக்கானது.
2 ஸ்கூட்டர்களிலுமே இன்ஜினை அதிர்வின்றி அமைதியாக ஸ்டார்ட் செய்யும் ஹோண்டாவின் 'சைலன்ட் ஸ்டார்ட் ஏசிஜி' (ACG Starter) மற்றும் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கும் 'என்ஹான்ஸ்டு ஸ்மார்ட் பவர்' (eSP) தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
ஹோண்டா ஆக்டிவா 6G: நேரடியான, பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. அடிப்படை வேரியண்ட்டுகளில் வழக்கமான அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. பெட்ரோல் போடும் போது சீட்டைத் திறக்க வேண்டிய அவசியமில்லாமல் வெளிப்புற டபுள்-லிட் ஃப்யூல் ஃபில்லர் மூடி (External fuel cap) வழங்கப்பட்டுள்ளது. இதன் உயர் ரக வேரியண்ட்டில் 'H-Smart' கீ தொழில்நுட்பம் மூலம் சாவியில்லா ஸ்டார்ட் (Keyless start), ஸ்மார்ட் அன்லாக் மற்றும் ரிமோட் மூலம் ஸ்கூட்டரைக் கண்டறியும் வசதிகள் கிடைக்கின்றன. மேலும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சுவிட்ச், சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் சென்சார் மற்றும் மேடு பள்ளங்களைச் சமாளிக்க முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஆகியவையும் இதில் உண்டு.
ஹோண்டா ஆக்டிவா 125: இதில் 4.2 இன்ச் டிஜிட்டல் டிஎஃப்டி (TFT) டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டிலும் H-Smart கீ வசதி உள்ளது. அத்துடன் மொபைல் சார்ஜ் செய்வதற்கான டைப்-சி யுஎஸ்பி (USB Type-C) போர்ட் கொண்ட முன்பக்க ஓபன் க்ளோவ் பாக்ஸ் மற்றும் குரோம் பூச்சுடன் கூடிய பிரீமியம் தோற்றமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டைப் பொறுத்தவரை ஆக்டிவா 6G குறைவான விலையிலும், ஆக்டிவா 125 கூடுதல் சிறப்பம்சங்களுக்காகச் சற்றே அதிக விலையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹோண்டா ஆக்டிவா 6G வேரியண்ட்கள்:
ஸ்டாண்டர்ட் (Standard) – ரூ.76,358
25-வது ஆண்டு நிறைவு பதிப்பு (25 Year Anniversary Edition) – ரூ.85,339
டீலக்ஸ் (Deluxe) – ரூ.87,011
ஸ்மார்ட் (Smart) – ரூ.91,482
ஹோண்டா ஆக்டிவா 125 வேரியண்ட்கள்:
25-வது ஆண்டு நிறைவு பதிப்பு (25 Year Anniversary Edition) – ரூ.89,656
டிஎல்எக்ஸ் (DLX) – ரூ.91,679
ஹெச்-ஸ்மார்ட் (H-Smart) – ரூ.96,122
தினசரி அலுவலகம் மற்றும் கடைவீதிப் பயணங்களுக்கு அதிக மைலேஜ் தேவைப்பட்டால், குறைந்த எடையில், குறுகலான தெருக்களில் எளிதாகத் திருப்பி பார்க்கிங் செய்யக்கூடிய ஸ்கூட்டர் வேண்டுமெனில், குறைவான பட்ஜெட்டில் எளிய குடும்ப ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டால், தினசரி பயண தூரம் குறைவாக இருந்து, டிஜிட்டல் திரைகள் பெரிதாகத் தேவையில்லை என்றால் ஹோண்டா ஆக்டிவா 6G-யை நீங்க தேர்ந்தெடுக்கலாம்.
அடிக்கடி பின்னால் ஒருவரை அமரவைத்துக்கொண்டு (Pillion rider) கூடுதல் நிலைத்தன்மை மற்றும் பவருடன் பயணிக்க வேண்டுமெனில், டிஜிட்டல் டிஎஃப்டி ஸ்கிரீன், செல்போன் சார்ஜிங் போர்ட் மற்றும் முன்பக்க ஸ்டோரேஜ் போன்ற நவீன வசதிகள் வேண்டுமெனில், முன்பக்க டிஸ்க் பிரேக் மூலம் கூடுதல் பிரேக்கிங் பாதுகாப்புத் தேவைப்பட்டால், அலாய் வீல்கள் மற்றும் குரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரீமியம் தோற்றத்தை விரும்பினால் ஹோண்டா ஆக்டிவா 125-ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்
குறைந்த பராமரிப்பு, பட்ஜெட் விலை மற்றும் அதிக மைலேஜை விரும்புபவர்களுக்கு ஆக்டிவா 6G சிறந்த தேர்வாகும். சற்று கூடுதல் பட்ஜெட்டில் முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் நவீன டிஜிட்டல் வசதிகளை விரும்புபவர்கள் ஆக்டிவா 125-ஐ தாராளமாகத் தேர்வு செய்யலாம்.