இந்தியாவில் தினசரி பயணத்திற்கு பைக் வாங்குபவர்கள் அதிக கவனம் செலுத்துவது மைலேஜ் மீதுதான். உயர்ந்து வரும் பெட்ரோல் விலை காரணமாக, குறைந்த செலவில் அதிக தூரம் செல்லக்கூடிய பைக்குகளே பெரும்பாலானோரின் முதல் தேர்வாக உள்ளன. அதனால்தான் 100சிசி மற்றும் 125சிசி இன்ஜின் கொண்ட கம்யூட்டர் பைக்குகள் இந்திய சந்தையில் எப்போதும் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. இந்த வகை பைக்குகள் அலுவலகம், கல்லூரி மற்றும் தினசரி தேவைகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடிப்பது பஜாஜ் பிளாட்டினா 100. இது இந்தியாவின் மிக மலிவு விலை கொண்ட கம்யூட்டர் பைக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 100சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக், வேகம் மற்றும் பவர் விட எரிபொருள் சிக்கனத்தையே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட பயணங்களிலும் சௌகரியமாக செல்ல உதவும் லாங்-டிராவல் சஸ்பென்ஷன் மற்றும் மென்மையான இருக்கை அமைப்பு இதன் முக்கிய அம்சங்கள். நிறுவனத்தின் தகவல்படி, பஜாஜ் பிளாட்டினா 100 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.65,407 ஆகும்.