பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக கொலை வழக்கில் ஜாமீன் வழங்கலாமா என்பதை முடிவு செய்வதற்கு ChatGPT பயன்படுத்தப்பட்டது.
முதல் முறையாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவது பற்றி முடிவெடுக்க சாட்ஜிபிடி (ChatGPT) செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருமாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், குற்றத்தின் கடுமையைக் கருத்தில் கொண்டு வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது சாட்-ஜிபிடி செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் கேள்வி எழுப்பி, அது அளிக்கும் பதில் சுட்டிக்காட்டப்பட்டது. விசாரிக்கப்படும் குற்றத்தின் கடுமையை உணர்த்தவே சாட் ஜிபிடி பயன்படுத்தப்பட்டது என்றும் அது அளித்த பதிலின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
கொடூரக் கொலை வழக்கு
லூதியானாவைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் என்பவரும் வேறு சிலரும் சேர்ந்து நடத்திய கொடூரமான தாக்குதலில் ஒருவர் மரணம் அடைந்தார். இதுதொடர்பாக சிம்லாபுரியில் உள்ள லூதியானா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜஸ்விந்தர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு உயர்நீதிமன்ற நீதிபதி அனூப் சிட்காரா முன்பு விசாரணைக்கு வந்தது.
கோவை இளைஞருக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டு கடுங்காவல் சிறை
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கொலை செய்வதே கொடூரமான குற்றம். ஆனால் கொடூரமான செயலால் ஒருவர் கொல்லப்படால் அது அதைவிட கொடூரமான குற்றமாக மாறிவிடும் என்று கூறினார். எனவே ஜாமீன் வழங்குவது அல்லது மறுப்பதற்கு குற்றம் எவ்வளவு கடுமையானது என்பதே ஒரு காரணியாக அமைகிறது எனவும் கொடூரமாகச் செயலில் ஈடுபடும் நபர்களால் ஏற்படும் பாதிப்பு அவர்கள் யாரை தாக்குகிறார்களோ அவர்களுக்கு மட்டுமில்லாமல் பல மட்டங்களில் ஏற்படுகிறது என நீதிபதி குறிப்பிட்டார்.
ChatGPT சொன்ன பதில்
மேலும், ஜாமீன் மீதான உலகளாவிய பார்வையை வழங்கும் நோக்கில் ChatGPT யிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சாட்ஜிபிடி, தொடக்கத்தில் "கொடூரத் தாக்குதல் வழக்குகளுக்கான ஜாமீன் மீது தீர்ப்பு வழங்குவது, வழக்கின் குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் வழக்கு விசாரிக்கப்படும் அதிகார வரம்பில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பொறுத்தது" என்று சொல்கிறது.
பின், "பொதுவாக, கொலை, மோசமான தாக்குதல் அல்லது சித்திரவதை போன்ற கொடுமைகளை உள்ளடக்கிய வன்முறைக் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தால், அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவராக அல்லது அபாயத்தை தூண்டக்கூடியவராகக் கருதப்படலாம். இதுபோன்ற வழக்குகளில், நீதிபதி ஜாமீன் வழங்க விரும்பாமல் இருக்கலாம் அல்லது ஜாமீன் தொகையை மிக அதிகமாக நிர்ணயம் செய்யலாம். தாக்குதலின் தீவிரம், ஜாமீன் கோருபவரின் குற்ற வரலாறு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் சாட்சியங்களின் வலிமை ஆகிய காரணிகளை ஜாமீன் வழங்கலாமா என்பதை தீர்மானிக்க கருத்தில் கொள்ளலாம்." என்று கூறுகிறது.
இறுதியாக, "ஜாமீனை மறுப்பதற்கான நிர்ப்பந்தமான காரணங்கள் இல்லாவிட்டால் அனைவரும் ஜாமீன் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியதும் அவசியம். எனவே, கொடூரமாக தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்குகளில்கூட, அவர்கள் சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுத்தவோ தூண்டவோ மாட்டார் என நீதிபதி தீர்மானித்தால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படலாம்" என்றும் விளக்குகிறது.
பின்னர் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தீர்ப்பில் சாட்ஜிபிடி அளித்த பதிலைக் குறிப்பிடவில்லை. ஆனால், ஜஸ்விந்தர் சிங் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. அத்துடன் வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
சட்டத் தேர்வில் பாஸ்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் ChatGPT என்ற மென்பொருள் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க சட்டப் பள்ளி தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாளுக்கு சரியான பதில்களை அளித்து பாஸ் ஆனது. அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக சட்டப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ஜானத்தன் இந்தச் சோதனையை செய்துபார்த்தார்.
கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் 12, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கேள்விகள் 95 என அத்தனைக்கும் பதில் அளித்த ChatGPT முடிவில் C+ கிரேடு பெற்று தேர்ச்சி பெற்றது என்றும் கட்டுரை வடிவ பதில்களை எழுதுவதில், ChatGPT அடிப்படை சட்ட விதிகளைப் புரிந்துகொண்டிருப்பதைக் காணமுடிகிறது என்றும் ஜானத்தன் கூறினார்.
தபால் துறையின் சூப்பர்ஹிட் திட்டம்! 12 ஆயிரம் டெபாசிட் செய்தால் ஒரு கோடியாக மாறும்!