எழுத்தாளர்களுக்கு ரூ.4,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு: விண்ணப்பிப்பது எப்படி?

By SG Balan  |  First Published Mar 16, 2023, 1:39 PM IST

தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தை தமிழக அரசு ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. 2022-23ஆம்‌ ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற  விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை வழங்குவது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி 58 வயது நிரம்பியவர்கள்தான் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும். அதாவது, 01.01.2022 அன்று 58 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். ஆண்டு வருவாய்‌ 72 ஆயிரம் ரூபாய்க்குள்‌ இருக்கவேண்டும்‌.

Tap to resize

Latest Videos

வருமானச்‌ சான்று, ஆற்றிய தமிழ்ப்பணிகள் குறித்த ஆதாரங்கள்‌, தமிழறிஞர்கள்‌ இருவரிடம் தமிழ்ப்பணி ஆற்றுவது குறித்த தகுதிநிலைச்‌ சான்று ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் அலுவலகத்தில் நேரில் பெறலாம். தமிழ்‌ வளர்ச்சித்‌துறையின்‌ www.tamilvalarchithurai.gov.in என்ற வலைத்தளத்திலும் இலவசமாகப்‌ பதிவிறக்கம்‌ செய்து முடியும்.

புக்கர் பரிசு நெடும்பட்டியலில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல்

இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற தெர்வு செய்யப்படும் தமிழ் அறிஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3500 உதவித்தொகை கொடுக்கப்படும். அத்துடன் மருத்துவப் படியாக ரூ.500 வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அறிஞரின் வாழ்நாள்‌ முழுவதும்‌ இந்த உதவித்தொகை வழங்கப்படும்‌. தமிழ் அறிஞர்களின் வாரிசுகளும் இத்திட்டத்தில் உதவித்தொகை பெறலாம். அவர்களுக்கு உதவித்தொகை ரூ.2,500 உடன் ரூ.500 மருத்துவப்படி கொடுக்கப்படும். இந்த நிதியுதவியுடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கான பயண அட்டையும் வழங்கப்படும்.

தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் முதுமையில் ஏழ்மையில் இருக்கக்கூடாது என்ற நோக்கில் இத்திட்டம் 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 795 தமிழறிஞர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகிறார்கள். சென்ற 2016-17ஆம் ஆண்டில் 50 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க தேர்வு செய்யப்பட்டனர். 2018-19ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100ஆக உயர்த்தப்பட்டது.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை தக்க ஆவணங்களுடன் இணைத்து, அந்தந்த மாவட்டத்‌ தமிழ்‌ வளர்ச்சித்துறை அலுவலகத்தில்‌ மார்ச் 31ஆம் தேதிக்குள்‌ கிடைக்கும்படி அனுப்பலாம் அல்லது நேரிலும் சமர்ப்பிக்கலாம். நேரடியாக தமிழ் வளர்ச்சித்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினால் அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாது. சென்னை மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் 'இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8' என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது நேரில் அளிக்கலாம்.

தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் - விண்ணப்பப் படிவம்

click me!