
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் ஃபேர் வே என்ற காலணி தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 52 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, இதற்கான விண்ணப்பங்கள் இன்று பெறப்பட்டன. மொத்தம் 52 பணியிடங்களே இருக்கும் நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பிப்பதற்காக திரண்டு வந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
52 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததால் நிறுவனத்தின் அதிகாரிகள் மிரண்டு போயினர். மேலும் ஒட்டுமொத்த கூட்டம் திரண்டதை அறிந்ததும் காவல்துறையினர் அங்கு வந்தனர். தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை கொடுக்க அங்கு திரண்டவர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு நிலவியது.
அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ''யாரும் காத்திருக்க வேண்டாம். சிறிது நேரம் கழித்து வாருங்கள்'' என்று மைக் மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தினார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவுக்கு நிலவுகிறது என்பதை இது பறைசாற்றுவதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்து விட்டன; அதனால் 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டது என்றும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தரவுகளின் படி, 2020-21ல் 54 லட்சமாக இருந்த பணியாட்களின் எண்ணிக்கை, 2025-26ல், கிட்டத்தட்ட 84 லட்சமாக உயர்ந்திருப்பதால், 30 இலட்சம் வேலைகள் கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதுதான் எதார்த்தம்
இப்படியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டு வந்த திமுக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு தொடர்பான எதார்த்தமான நிலை என்ன என்பதை போச்சம்பள்ளியில் வேலை கேட்டு திரண்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் காட்டியிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
புதியதோர் தமிழகம் அமையும்
திமுக அரசின் முகமூடியும், மோசடி வலையும் கிழியத் தொடங்கி விட்டன. வேலை கேட்டு போச்சம்பள்ளியில் இன்று திரண்ட இளைஞர் சக்தி, வெகு விரைவில் திமுக அரசை விரட்டியடிக்க பெருமளவில் திரளும். அப்போது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உண்மையாகவே புதியதோர் தமிழகம் அமையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.