
இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் 2026-ம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் புதிய வேலைகளைத் தேடும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்திருந்தாலும், மறுபுறம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. லிங்க்ட்இன் (LinkedIn) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, சுமார் 84 சதவீத இந்தியப் பணியாளர்கள் 2026-ல் புதிய வேலையைத் தேடுவதற்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில் கலந்துகொண்ட இந்தியர்களில் 72 சதவீதம் பேர், 2026-ம் ஆண்டில் புதிய வேலைக்கு மாறத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் தற்போதைய நேர்காணல் முறைகளைக் கண்டு தயங்குகிறார்கள். குறிப்பாக, நிறுவனங்கள் ஆட்களைத் தேர்வு செய்ய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, திறமைக்கான அளவுகோல்கள் மாறிக்கொண்டே இருப்பது மற்றும் கடுமையான போட்டி ஆகியவை இந்தத் தயக்கத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. 2022-ம் ஆண்டிலிருந்து ஒரு வேலைக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது, போட்டியை மேலும் கடுமையாக்கியுள்ளது.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தலைமுறைகளுக்கு இடையே பெரிய வேறுபாடு உள்ளது. 90 சதவீத மில்லினியல்கள் (Millennials) மற்றும் 89 சதவீத ஜென் ஜி (Gen Z) இளைஞர்கள் வேலையில் AI-ஐப் பயன்படுத்துவதில் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால், ஜென் எக்ஸ் (Gen X - 79%) மற்றும் பேபி பூமர்ஸ் (Baby Boomers - 77%) இவர்களுடன் ஒப்பிடும்போது சற்று பின்தங்கியே உள்ளனர். இருப்பினும், வேலை தேடும் விஷயத்தில் அனைத்துத் தலைமுறையினருமே, AI சார்ந்த தேர்வு முறைகளை எதிர்கொள்ளத் திணறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை தேடுபவர்களில் 94 சதவீதம் பேர் தங்கள் வேலை தேடலுக்கு AI கருவிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், நிறுவனங்கள் தங்களை AI மூலம் எப்படி மதிப்பீடு செய்கின்றன என்பது பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. "நிறுவனங்களின் தேர்வு முறை மிகவும் சிக்கலாகிவிட்டது (77%)" என்றும், "மனிதத்தன்மையற்ற முறையாக மாறிவிட்டது (66%)" என்றும் பல பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மறுபுறம், தகுதியான ஆட்களைக் கண்டுபிடிப்பது கடந்த ஆண்டை விடக் கடினமாகிவிட்டதாக 74 சதவீத மனிதவள மேம்பாட்டாளர்கள் (Recruiters) கூறுகின்றனர்.
தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடந்தாலும், சில ஆச்சரியமான துறைகளிலும் வளர்ச்சி காணப்படுகிறது. லிங்க்ட்இன் அறிக்கையின்படி, 2026-ல் அதிகம் டிமாண்ட் உள்ள வேலைகள்:
1. ப்ராம்ட் இன்ஜினியர் (Prompt Engineer)
2. AI இன்ஜினியர் (AI Engineer)
3. சாஃப்ட்வேர் இன்ஜினியர் (Software Engineer)
இவை தவிர, விற்பனை (Sales), சைபர் செக்யூரிட்டி, கால்நடை மருத்துவர் (Veterinarian), சோலார் ஆலோசகர் மற்றும் நடத்தை சிகிச்சை நிபுணர் (Behavioural Therapist) போன்ற பணிகளுக்கும் மவுசு கூடியுள்ளது.
இதுகுறித்து லிங்க்ட்இன் இந்தியாவின் கேரியர் எக்ஸ்பர்ட் நிரஜிதா பானர்ஜி கூறுகையில், "இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் ஒருவரது வாழ்க்கையை கட்டமைப்பதிலும், திறமையை மதிப்பிடுவதிலும் AI இப்போது ஒரு அடிப்படை அங்கமாகிவிட்டது. திறமைக்கும் வாய்ப்புக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க AI கருவிகளைச் சரியான நோக்கத்துடன் பயன்படுத்த வேண்டும். இது சரியான வேலையைக் கண்டறியவும், அதற்குத் தயாராகவும் உதவும்," என்று தெரிவித்துள்ளார்.